மாஸ்கோ: உக்ரைனுக்கு எதிராக 2022ம் ஆண்டு ரஷ்யா போர் தொடுத்தது. போரானது மூன்றரை ஆண்டுகளை நிறைவு செய்தும் தொடர்ந்து நீடித்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா ஆதரவு கரம் நீட்டி வருகிறது. ரஷ்யாவுக்கு, நட்பு நாடான வடகொரியா, ராணுவ தளவாடங்கள் மற்றும் வீரர்களை அனுப்பி மறைமுக உதவி செய்கிறது என கூறப்படுகிறது. போரை நிறுத்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் பலருடனும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தொடர்ந்து பேசி வருகிறார். ஆனால், ரஷ்யா வோ போரை நிறுத்தும் முடிவுக்கு வரவில்லை. அதற்கான பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு ஏற்படவில்லை.
உக்ரைனின் ஐந்தில் ஒரு பங்கு நிலப்பரப்பை ரஷ்யா ஆக்கிரமித்து உள்ளது. இந்த சூழலில், ஐ.நா. பொதுச்சபையின் கூட்டத்தில் பங்கேற்று டிரம்ப் பேசினார். அதன் ஒரு பகுதியாக, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியையும் சந்தித்து பேசினார். அப்போது அவர், ரஷ்யா பலவீனத்துடன் உள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி அது கைப்பற்றிய அனைத்து பகுதிகளையும் திரும்ப எடுத்து கொள்ள வேண்டும் என ஜெலன்ஸ்கியுடன் பேசும்போது டிரம்ப் கூறினார். ஐரோப்பிய யூனியனுடன் இணைந்து தன்னுடைய பகுதிகளை உக்ரைன் திரும்ப எடுத்து கொள்ளும். அதற்காக போரிட்டு வெற்றி பெறும் என நினைக்கிறேன் என்றும் டிரம்ப் நம்பிக்கை வெளியிட்டார். தொடர்ந்து அவர், உண்மையான ராணுவ அதிகாரம் கொண்ட எந்த ஒரு நாடும் போரில் வெற்றி பெறுவதற்கு ஒரு வாரம் போதும். இப்படி மூன்றரை ஆண்டுகளை எடுத்து கொள்ளாது. இதனால் ரஷ்யா ஒன்றும் தனித்துவ நாடு அல்ல. உண்மையில், அவர்கள் ஒரு காகிதப்புலி போன்று இருக்கிறார்கள் என கிண்டலாக கூறினார்.
இதற்கு பதிலடி கொடுத்த ரஷ்யா, பல தடைகளை விதித்தபோதும், பொருளாதார ரீதியாக நாங்கள் நிலைத்து நிற்கிறோம். ரஷ்யா ஒன்றும் காகிதப்புலி அல்ல. ஆனால், நாங்கள் உண்மையான கரடி என்று தெரிவித்து உள்ளது. ரஷ்யாவின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் இதனை மறுத்ததுடன், ஜெ கூறிய விசயங்களை கேட்டு விட்டு டிரம்ப் கூறுகிறார். அந்த வகையில் ஆய்வு செய்து விட்டு அவர் இப்படி கூறியுள்ளார். உக்ரைனில் ரஷ்யா ராணுவம் தொடர்ந்து முன்னேறி வருகிறது என்றும் அவர் தெளிவுப்படுத்தி உள்ளார். கட்டுப்பாடுகள் மற்றும் தடைகள் விதித்தபோதும், அதனை தகர்த்து முன்னேறுகிறோம். எங்களுடைய தாக்குதல் திறனை குறைத்து மதிப்பிட வேண்டாம். அவை ஆழ்ந்து சிந்தித்து எடுக்கப்பட்ட முடிவுகள் என கூறியுள்ளார்.