அதிக சத்துகள் நிரம்பிய பப்பாளி பலராலும் விரும்பி உண்ணப்படுவதால் மார்க்கெட்டில் இதற்கு எப்போதும் தனி மவுசு உண்டு. இதைப் பயிர் செய்யும் விவசாயிகளுக்கு நல்ல லாபமும் கிடைக்கிறது. இத்தகைய பப்பாளியைத் தாக்கும் முக்கிய நோயான இலைச்சுருள் நோய் குறித்தும், அதனைத் தடுக்கும் முறைகள் குறித்தும் விளக்குகிறார்கள் ரா. ஆஷா ஏஞ்சலின், மு. அபிநயா- தூத்துக்குடி கிள்ளிக்குளம் வ.உ.சிதம்பரனார் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தைச் சேர்ந்த ஆஷா ஏஞ்சலின், அபிநயா, திருநெல்வேலி அம்பை நெல் ஆராய்ச்சி நிலையத்தைச் சேர்ந்த ஜெய் ஆகாஷ் ஆகியோர். தமிழ்நாட்டில் தர்மபுரி, ஈரோடு, வேலூர், கோவை, திண்டுக்கல், கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் பப்பாளி அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. பப்பாளி பல வகையான பூசண மற்றும் வைரஸ் நச்சுயிரி நோய்களால் பாதிக்கப்படுகிறது. இவற்றுள் வைரஸ் நச்சுயிரி நோயாகிய இலைச்சுருள் மற்றும் இலை சுருட்டல் நோய் மிக முக்கியமானது. இந்நோய் தாக்கப்பட்ட மரங்கள் பூக்காது. எனவே பழங்கள் உருவாகாமல் விளைச்சல் குறைந்து காணப்படும்.
நோயின் அறிகுறிகள்
நோய் பாதிக்கப்பட்ட மரத்தில் உடனடியாக வளர்ச்சி தடைபடும். நோய் பாதிக்கப்பட்ட மரத்தின் இலைகள் சுருங்கி, சுருண்டு, உருக்குலைந்து காணப்படும். நோய் பாதிக்கப்பட்ட இலையின் ஓரங்கள் கீழ்நோக்கியும், உள்நோக்கியும் சுருண்டு தலைகீழான கிண்ணத்தைப் போன்று காணப்படும். நோய் பாதிக்கப்பட்ட மரத்தின் இலைகள் தோல் போன்றும், எளிதில் உடையக்கூடிய தன்மை கொண்டதாகவும், இலைகளின் நரம்புகள் தடிப்பாகவும் காணப்படும். நோய் பாதிக்கப்பட்ட பப்பாளிச் செடியின் பூக்கள் மற்றும் பழங்களின் வளர்ச்சி உடனடியாக தடைபடும். பொதுவாக நோய் பாதிக்கப்பட்ட செடியின் முதல் மற்றும் மேல் இலைகள் அதிக தாக்குதலுக்கு உள்ளாகும். நோய் பாதிக்கப்பட்ட செடியின் இலைகள் பச்சையும், மஞ்சளும் கலந்தது போன்ற தோற்றத்துடன் காணப் படும். நோய் பாதிக்கப்பட்ட மரத்தின் பழங்கள் மிகச்சிறிய அளவிலும், ஒழுங்கற்ற வடிவத்துடனும், நோய் முற்றிய நிலையில் உதிர்ந்து மரத்தின் வளர்ச்சி வெகுவாக குன்றியும் காணப் படும். இந்த நோயை உண்டாக்கக்கூடிய நச்சுயிரியை வெள்ளை ஈக்கள் என்ற பூச்சிகள் அதிக அளவில் பரப்பும்.
ஒருங்கிணைந்த நோய் கட்டுப்பாடு
நோய் பாதிக்கப்பட்ட மரங்களை முழுவதுமாக அகற்றி அழித்துவிட வேண்டும். பரிந்துரைக்கப்பட்ட உரங்களை சரியான அளவில் இடுவதன் மூலம் நோயைப் பரப்பக்கூடிய பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம். வேப்பங்கொட்டைச் சாறு 5 சதவீதத்திலும் அல்லது வேப்ப எண்ணெய் 5 சதவீதத்திலும் தண்ணீரில் கலந்து தெளிப்பதன் மூலம் இந்த நோயைப் பரப்பக்கூடிய பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம். இமிடாகுளோபிரிட் (17.8% எஸ்.எல்.) 50 மி.லி./ ஏக்கர் அல்லது டையோமிதாக்சம் (25 சதவீதம் டபிள்யூ ஜி) 80 கிராம்/ஏக்கர் அல்லது பைப்ரோனில் (5 சதவீதம் எஸ்.சி.) 600 முதல் 800 மி.லி./ஏக்கர் என்ற அளவில் தெளிப்பதன் மூலம் நோயைப் பரப்பக்கூடிய வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்தலாம்.