*சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
தஞ்சாவூர் : தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுக்கா திருவைக்காவூர் பகுதியிலிருந்து வேதாரண்யம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் நல்லூர் வழியாக வேதாரண்யம் பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
இந்த நிலையில் நல்லூர் குடமுருட்டி ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, ஒரு மாத காலமாக பல்லாயிரக்கணக்கான லிட்டர் குடிநீரானது வீணாக ஆற்றில் கலக்கிறது.
மேலும் குழாய்கள் முழுவதும் பச்சை பாசிகள் சூழ்ந்து பழுதடைந்து காணப்படுகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரியிடம் பலமுறை தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே உடனடியாக மாவட்ட நிர்வாகமும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும் போர் கால அடிப்படையில் கூட்டு குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்ய வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.