பந்தலூர் : பந்தலூர் அருகே பொன்னானியில் இருந்து அம்மங்காவு வழியாக கொளப்பள்ளி செல்லும் சாலையின் இருபுறமும் முட்புதர்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டம் சேரன்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட பொன்னானியில் இருந்து அம்மன்காவு வழியாக கொளப்பள்ளி செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் பள்ளி வாகனங்கள், தனியார் வாகனங்கள், விவசாயிகளிடம் பசுந்தேயிலை கொள்முதல் செய்ய வரும் வாகனங்கள், சரக்கு வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த சாலையில் இருபுறமும் பல இடங்களில் செடி, கொடிகள் வளர்ந்து சாலையில் சாய்ந்து மூடும் நிலையில் உள்ளது. அதனால் வாகனங்கள் செல்வதற்கும் பொதுமக்கள் நடந்து செல்வதற்கும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. எனவே சேரங்கோடு ஊராட்சி நிர்வாகம் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் செடிகளை வெட்டி அகற்ற வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் வலியுறுத்தினர்.