* பண வசதி, செல்வாக்கு இருந்தும் திருட்டு மீது ஆசை விடவில்லை
* வெளியில் தெரிந்தால் பதவி பறிபோகும் என போலீசாரிடம் கதறல்
சென்னை: பேருந்து நிலையத்தில் ஓய்வெடுத்த பெண்ணிடம் செயின் திருடிய ஊராட்சி மன்ற தலைவியை போலீசார் கைது செய்தனர். சென்னை நெற்குன்றம் பகுதியை சேர்ந்தவர் வரலட்சுமி (52). இவர், கடந்த ஜூலை மாதம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உறவினர் திருமணத்துக்கு சென்றுவிட்டு, அங்கிருந்து வீடு திரும்புவதற்காக காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் ஓய்வெடுத்துள்ளார். அப்போது அவரது பையில் வைத்திருந்த தாலி செயின் மாயமானது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பல இடங்களில் தேடியும் செயின் கிடைக்கவில்லை. இதுபற்றி கோயம்பேடு குற்றப் பிரிவு காவல்நிலையத்தில் புகார் வரலட்சுமி புகார் கொடுத்தார். புகாரில் அவர் கூறியிருப்பதாவது: கடந்த ஜூலை 14ம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம் பகுதியில் உள்ள உறவினர் திருமணத்துக்கு சென்று விட்டு, அங்கிருந்து வீட்டுக்கு வருவதற்காக காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் காத்திருந்தபோது, என் பக்கத்தில் ஒருபெண் அமர்ந்து வெகுநேரம் பேசிக்கொண்டிருந்தார்.
எனவே, அந்த பெண்தான் நகையை திருடியிருப்பார் என சந்தேகமாக உள்ளது. எனவே, எனது செயினை கண்டுபிடித்து தரவேண்டும். இவ்வாறு தெரிவித்திருந்தார். அதன்படி, இன்ஸ்பெக்டர் ஜானகிராமன் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 300க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் வரலட்சுமியை பின் தொடர்ந்து ஒரு பெண் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. இதையடுத்து அந்த பெண்ணை தேடி வந்தனர். இந்நிலையில், சென்னை சேத்துப்பட்டு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அந்த பெண் சிகிச்சைக்காக வந்துள்ளது தெரிந்தது. இதையடுத்து போலீசார் சென்று அந்த பெண்ணை பிடித்து விசாரித்தபோது, திருப்பத்தூர் மாவட்டம், நரியப்பட்டு ஊராட்சி மன்ற தலைவி பாரதி (53) என்று தெரியவந்தது.
இவர் ஊராட்சி தலைவி என்பதால், இவர்தான் நகை திருடினாரா என்று போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. விசாரிப்பதிலும் சிறிது தயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து ஆய்வு செய்தபோது அவர்தான் என உறுதி செய்தனர். தொடர் விசாரணையில் இவர் மீது ஏற்கனவே வேலூர், ஆம்பூர், திருப்பத்தூர் மற்றும் வாணியம்பாடி ஆகிய காவல் நிலையங்களில் பண மோசடி உட்பட்ட 10 திருட்டு வழக்குகள் உள்ளது தெரியவந்துள்ளது. திருட்டு சம்பந்தமாக சிறைக்கு சென்று ஜாமீனில் வெளியே வந்துள்ளார். ஊராட்சி மன்ற தலைவி பாரதி அளித்த வாக்குமூலம் பற்றி போலீசார் கூறியதாவது: ஊராட்சி மன்ற தலைவி பதவியில் 4 வருடமாக உள்ளேன். எனக்கு பண வசதி, செல்வாக்கு இருந்தும் திருட்டின் மீதான ஆசையால் அவற்றை கைவிட முடியவில்லை.
எதற்காக திருடுகிறேன் என்று எனக்கும் தெரியவில்லை. ஆனால் திருட்டில் ஈடுபடும்போது சந்தோசமாக இருந்தது. திருட்டு வழக்கில் சிறைக்கு சென்று வந்தது தெரியவந்ததால் எனது ஊராட்சி மன்ற தலைவர் பதவி பறிபோகும். என்னை மன்னித்து விடுங்கள். காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் பெண்ணிடம் 6 சவரன் செயின் திருடியது நான்தான். இனிமேல் திருட்டில் ஈடுபட மாட்டேன். என்னை மன்னித்து விடுங்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார். இதையடுத்து பாரதியை கைது செய்து, எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் பெண்கள் சிறையில் அடைத்தனர்.