*ஆட்சியர் அறிவுறுத்தல்
திட்டக்குடி : அனைத்து திட்ட பணிகளையும் விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது, என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார். கடலூர் மாவட்டம் மங்களூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தொழுதூர் ஊராட்சியில் சாலை பணிகள், கலைஞர் கனவு இல்லம் வீடு கட்டுமான பணிகள், அங்கன்வாடி மையம் மற்றும் நூலகம் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் கூறுகையில், ஊரக மக்களின் நலன் கருதியும், கிராமப்புறங்களில் சாலை வசதி, குடிநீர் வசதி, அங்கன்வாடி மையங்கள், பள்ளி மற்றும் மருத்துவ வசதிகள் உள்ளிட்ட அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அனைவரும் தங்கள் குடும்பங்களுடன் ஒரு சொந்த வீட்டில் வசிக்க வேண்டும் என்ற அடிப்படையில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய வீடுகள் கட்டப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு கடலூர் மாவட்டத்தில் 3 ஆயிரத்து 500 வீடுகளும், நடப்பாண்டில் 5 ஆயிரத்து 500 வீடுகளும் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் நடைபெறும் கட்டுமான பணிகளை தொழுதூர் ஊராட்சியில் நேற்றைய தினம் ஆய்வு மேற்கொண்டதோடு, பணிகளை விரைந்து முடித்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் நலனுக்காகவும், போட்டி தேர்வு எழுதிடும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காகவும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட தொழுதூர் கிராமப்புற நூலகத்தில், நூல்களின் இருப்பு மற்றும் அடிப்படை தேவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தொழுதூர் ஊராட்சியில் ரூ.1 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய அங்கன்வாடி மையக் கட்டுமான பணிகளை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும், தொழுதூர் அங்கன்வாடி மையத்தில் தினசரி குழந்தைகள் வருகை பதிவேடு, எடை மற்றும் ஊட்டச்சத்து விகிதம் குறித்து பராமரிக்கப்படும் பதிவேடுகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து, அங்கன்வாடி மைய பணியாளர்கள் குழந்தைகள் பராமரிப்பில் சிறப்பு கவனம் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொழுதூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தொழுதூர் முதல் ஆலமரத்து காட்டுச்சாலை அமைப்பது குறித்தும், ரூ.93 லட்சத்து 22 ஆயிரம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள வைத்தியநாதபுரம் முதல் நாங்கூர் வரை சிமெண்ட் சாலையின் தரம் மற்றும் உறுதித்தன்மை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் அனைத்து திட்ட பணிகளையும் விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது, என்றார். ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்பட பலர் உடன் இருந்தனர்.