ஊட்டி : குறைந்தபட்ச ஊதிய சட்டப்படி தூய்மை பணியாளர்கள், குடிநீர் பம்ப் ஆபரேட்டர்களுக்கு ஊதியம் வழங்க கோரி ஊட்டியில் காத்திருப்பு போராட்டத்தில் ஊராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.குறைந்தபட்ச ஊதிய சட்டப்படி, தமிழக அரசால் வெளியிடப்பட்ட அரசாணைப்படி குடிநீர் பம்ப் ஆபரேட்டர், தூய்மை பணியாளர்கள், பைப்பிட்டர், வரி வசூலிப்பாளர்களுக்கு ரூ.15 ஆயிரத்து 550 ஊதியம் வழங்க வேண்டும்.
தமிழ்நாடு அரசிடம் ஏஐடியுசி ஊராட்சி தொழிற் சங்க தலைவர்கள் நடத்திய பேச்சு வார்த்தையின் அடிப்படையில் ஏற்றுக்கொண்ட கோரிக்கைகளுக்கு அரசாணை உடனடியாக வழங்கிட வேண்டும். 20 ஆண்டுகள் பணி முடித்த வட்டார, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களையும், பம்ப் ஆபரேட்டர்களையும், பைப்பிட்டர், வரி வசூலிப்பாளர்களையும் பணி நிரந்தரப்படுத்த வேண்டும்.
கொரோனா காலத்தில் பணியாற்றிய குடிநீர் பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்களுக்கு கொரோனா கால ஊக்கத்தொகை வழங்கப்பட வேண்டும். கணினி இயக்குபவர்களுக்கு வருடாந்திர சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும்.
தூய்மை காவலர், பம்ப் ஆபரேட்டர், பைப் பிட்டர், தூய்மை பாரதி ஒருங்கிணைப்பாளர், வரி வசூலிப்பாளர் ஆகிய பணியாளர்களுக்கு ஆண்டு ஊதிய உயர்வு அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்பும் போது, தற்காலிக குடிநீர் பம்ப் ஆபரேட்டர்களை அந்த பணியிடங்களில் நிரப்ப வேண்டும்.
தமிழ்நாடு அரசாணைப்படி 7வது ஊதிய நிலுவை தொகையை உடனடியாக வழங்கிட வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர்கள் நேற்று ஊட்டியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஊராட்சி பணியாளர் சம்மேளனம் மாவட்ட செயலாளர் தொரை தலைமை வகித்தார்.
பொருளாளர் ரவி, மாவட்ட குழு உறுப்பினர் ராஜூ, கே.தொரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிபிஐ மாவட்ட செயலாளர் போஜ்ராஜ், ஏஐடியுசி கவுன்சில் பொதுச்செயலாளர் மூர்த்தி, நீலகிரி மாவட்ட சங்க பொதுச்செயலாளர் ரகுநாதன், சுந்தர்ராஜ், ரமேஷ், சந்திரசேகர், குண்டன் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.


