Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

பஞ்சலிங்க அருவியில் காட்டாற்று வெள்ளம் அமணலிங்கேஸ்வரர் கோயில் வளாகம் மூழ்கியது

உடுமலை: திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் நள்ளரவில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்தது. இதனால் அடிவாரத்தில் உள்ள அமணலிங்கேஸ்வரர் கோயில் வளாகம் நீரில் மூழ்கியது. சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இருந்து சுமார் 22 கிமீ தொலைவில் திருமூர்த்திமலை உள்ளது. இங்கு புகழ்பெற்ற அமணலிங்கேஸ்வரர் கோயில் உள்ளது. கோயிலுக்கு தினசரி ஏராளமான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர். கோயிலுக்கும், பஞ்சலிங்க அருவியில் குளித்து மகிழவும் சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் அதிகளவில் வருகின்றனர்.

வடகிழக்கு பருவமழை காரணமாக, கடந்த சில தினங்களாக திருமூர்த்தி மலைப்பகுதியில் மழை பெய்து வருகிறது. கனமழையால் அருவிக்கு நீர்வரத்து அதிகரித்ததால் கடந்த 2 தினங்களாக அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. நேற்று இரவு 11 மணியளவில் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழை காரணமாக அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தோணி ஆற்றில் கரைபுரண்டு ஓடிய காட்டாற்று வெள்ளம், அடிவாரத்தில் உள்ள அமணலிங்கேஸ்வரர் கோயில் வளாகத்தை மூழ்கடித்தபடி திருமூர்த்தி அணைக்கு சென்றது.

வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது, பிரம்மா, விஷ்ணு, சிவன் சிலைகள் அமைந்துள்ள கோயில் வளாகத்தில் மட்டுமே தண்ணீர் சூழ்ந்தபடி செல்லும். ஆனால் இரவு கட்டுக்கடங்காத வெள்ளம் காரணமாக அருகில் உள்ள விநாயகர் கோயில், சப்தகன்னியர் கோயில்களையும் வெள்ளம் சூழ்ந்தது. அமணலிங்கேஸ்வரர் கோயில் வளாகம் பாதியளவுக்கு மூழ்கும் வகையில் வெள்ளம் ஆர்ப்பரித்து சென்றது. வெள்ளத்தில் அடித்துவரப்பட்ட மரக்கிளைகள் கோயில் வளாகத்தில் பெருமளவு தேங்கியது. இன்று காலை வெள்ளம் குறைந்தது. இருப்பினும் அருவிக்கு செல்ல 3வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. கோயில் வளாகத்தை தூய்மை செய்யும் பணி நடப்பதால் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.