பனையூரில் நிர்வாக குழு கூடியது: 28 பேர் ஆலோசனை கூட்டத்தை கட்சி தலைவர் விஜய் புறக்கணிப்பு; பாஜ கூட்டணிக்கு கடும் எதிர்ப்பு
சென்னை: தவெகவின் 28 பேர் அடங்கிய நிர்வாக குழு கூட்டம் பனையூரில் நேற்று நடந்தது. இந்த ஆலோசனை கூட்டத்தை கட்சி தலைவர் நடிகர் விஜய் திடீரென புறக்கணித்து விட்டார். அதேநேரத்தில் கூட்டத்தில் பாஜ கூட்டணிக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இதுகுறித்த அறிக்கையை விஜய்யிடம் வழங்க நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர். தமிழக சட்டசபை தேர்தல் வரும் 2026ல் நடக்கிறது. தேர்தலை சந்திக்கும் வகையில் தவெக மக்கள் சந்திப்பை முன்னெடுத்துள்ளது. கரூரில் நடந்த தவெக பிரசார நிகழ்ச்சியின்போது நெரிசலில் சிக்கி குழந்தைகள் உள்பட 41 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.
இந்நிலையில் கரூர் சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினரை மாமல்லபுரம் வரவழைத்து ஒவ்வொருவராக சந்தித்து விஜய் ஆறுதல் கூறினார். தொடர்ந்து தவெகவின் சட்டமன்ற தேர்தல் பணி மற்றும் கட்சி செயல்பாடுகளை ஒருங்கிணைக்க 28 பேர் கொண்ட நிர்வாக குழு அமைத்து விஜய் உத்தரவிட்டார். இந்நிலையில், நேற்று காலை 10 மணி அளவில் பனையூர் 8வது அவென்யூ பகுதியில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் 28 பேர் கொண்ட நிர்வாக குழு ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, கொள்கை பரப்பு செயலாளர் அருண்ராஜ் உள்ளிட்ட 28 பேர் கொண்ட குழுவினர் ஆலோசனை நடத்தினர். கூட்டம் பிற்பகல் 1.30 மணி வரை நடந்தது. கூட்டத்தில், கட்சி தலைவரான நடிகர் விஜய் பிற்பகல் 1 மணிக்கு கலந்துகொள்வார் என்று நிர்வாகிகள் காத்திருந்தனர். ஆனால் கடைசி நேரம் வரை அவர் வரவில்லை.
கூட்டத்தில், வரும் சட்டமன்ற தேர்தலின்போது வாக்காளர்களை எப்படி சந்தித்து வாக்குகேட்பது, மக்களை எப்படி அணுகுவது என்பது குறித்து நிர்வாக குழுவினருக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. அப்போது, தேர்தல் கூட்டணி குறித்து பேச்சு எழுந்துள்ளது. பெரும்பாலான நிர்வாகிகள், பாஜ கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் நமது கொள்கை எதிரி பாஜ. அவர்களை எதிர்த்துதான் கட்சி ஆரம்பித்துள்ளோம். தற்போது அவர்களுடனேயே கூட்டணி வைத்தால் மக்கள் நம்புவார்களா? அப்படி கூட்டணி வைப்பது கூட்டத்தில் உயிரிழந்த 41 பேருக்கு செய்யும் துரோகம் என்று கூறியுள்ளனர். மேலும் நவம்பர் 10ம் தேதிக்கு மேல் விஜய் சுற்றுப் பயணம் செய்ய இருப்பது குறித்தும், நிர்வாக
குழுவைச் சேர்ந்த 28 பேர் உள்ள வாட்ஸ்அப் குழுவை தொடங்குவது, அதில் மக்கள் பிரச்னைகளை பேசி, அறிக்கை விடுவது குறித்து முடிவெடுப்பது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டன. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து விஜய்க்கு அறிக்கை அளிப்பது என்றும் முடிவு எடுக்கப்பட்டது.
கூட்டத்திற்கு பின்னர், தவெக இணை பொது செயலாளர் நிர்மல்குமார் கூறியதாவது: தவெக முதல் நிர்வாக குழு கூட்டம் இன்று (நேற்று) நடந்தது. கட்சி பணிகள், தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. கட்சி தலைவர் விஜய்யின் அடுத்தகட்ட சுற்றுப்பயணம் குறித்து விரைவில் தெரிவிக்கப்படும். நீதிமன்ற வழிகாட்டு நெறிமுறைகள் வந்த பிறகு இதுகுறித்து முடிவெடுக்கப்படும். கரூர் சம்பவம் நடந்த நாளன்று தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் தாக்கப்பட்டனர். கட்சியை முடக்க வேண்டும் என்று நினைத்தார்கள். அது நிச்சயம் நடக்காது. தேர்தல் சின்னம் வழங்குவதற்கு எல்லாம் நேரம் இருக்கிறது. விஜய்யின் வாகனத்தை சுற்றி 2500 இருசக்கர வாகனங்கள் வந்தது. பொது இடத்தில் நாங்கள் எதுவும் செய்ய முடியாது. காவல்துறை எங்களுக்கு உதவி செய்யவில்லை. ஒரு மாதத்திற்கு முன்பு என்ன நிலைப்பாட்டில் இருந்தோமோ அதே நிலைப்பாடு தான் தற்போதும். எந்த மாற்றமும் இல்லை.
தவெக கொள்கை பரப்பு செயலாளர் அருண்ராஜ் கூறியதாவது: சிறப்பு பொதுக்குழு கூட்டம் தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும். பொதுமக்களுக்கு எந்த இடையூறும் இல்லாத வகையில் அடுத்தகட்ட பிரசாரங்களை முன்னெடுக்க திட்டமிட்டு வருகிறோம். எஸ்ஐஆர் என்கிற பெயரில் போலி வாக்காளர்களை சேர்ப்பதோ, நீக்குவதோ முற்றிலும் ஜனநாயகத்திற்கு எதிரான செயல். இவ்வாறு அவர்கள் கூறினர்.
* நவம்பர் 5ல் பொதுக்குழு
விஜய் வெளியிட்ட அறிக்கை: ‘‘தவெகவின் படைக்கலன்களாக நீங்கள் இருக்கையில், காக்கும் கவசமாக தமிழ்நாட்டு மக்களோடு நமக்குள்ள உறவை, அவர்களுக்கான குரலாக தொடரும் நம் வெற்றி பயணத்தை எவராலும் தடுக்க இயலாது. இதை, நாம் சொல்ல வேண்டியதே இல்லை. கடந்த ஒரு மாத காலமாக, தமிழக மக்களே இதை மவுன சாட்சியாக உலகிற்கு உரைத்து கொண்டிருக்கின்றனர். கள நிலவரம் நம்மை ஊக்குவிப்பதாக இருக்கும் போது, நமது அடுத்த அடியை இன்னும் நிதானமாகவும், அளந்தும், தீர்க்கமாகவும் எடுத்து வைக்க வேண்டும். இத்தகைய சூழலில், கழகத்தின் அடுத்தகட்ட தொடர்நிகழ்வுகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து விவாதிக்க வேண்டும். ஆகவே இதுகுறித்து முடிவுகள் எடுக்க கழகத்தின் பொதுக்குழுவின் சிறப்பு கூட்டத்தை கூட்ட முடிவு செய்துள்ளோம். அதன்படி, வரும் நவம்பர் 5ம் தேதியன்று, தவெகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டம், மாமல்லபுரம் போர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டன் ஓட்டலில் காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. வாருங்கள், சிறப்பு பொதுக்குழுவில் கூடுவோம். வருங்காலம் நமதென்று காட்ட, தீர்க்கமாக திட்டமிடுவோம். நல்லதே நடக்கும்’’ என்றார்.
