Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பனகல் பூங்காவில் இருந்து கோடம்பாக்கம் வரை 2ம் கட்ட சுரங்கப்பாதை பணி நிறைவு: மெட்ரோ நிர்வாகம்

சென்னை: பனகல் பூங்காவில் இருந்து கோடம்பாக்கம் வரை 2ம் கட்ட சுரங்கப்பாதை பணி நிறைவு பெற்றுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சென்னை நகரம் முழுவதும் 118.9 கி.மீ நீளத்திற்கு மூன்று வழித்தடங்களுடன் மிகவும் எதிர்பார்க்கப்படும் இரண்டாம் கட்டத் திட்டத்தை முழு வீச்சில் செயல்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் 2 வழித்தடம் 4-ல் கலங்கரை விளக்கம் நிலையத்திலிருந்து கோடம்பாக்கம் மேம்பாலம் வரையிலான 10.03 கி.மீ. நீளத்திற்கு சுரங்கப்பாதை கட்டுமான பணிகள் ITD சிமென்டேஷன் இந்தியா நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட்டு இதற்காக 4 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இத்திட்டத்திற்கு ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி மற்றும் புதிய மேம்பாட்டு வங்கி ஆகியவை நிதியுதவி வழங்குகின்றன.

வழித்தடம்-4-ல் சுரங்கம் தோண்டும் இயந்திரம் “மயில்”, மே 02, 2024 அன்று பனகல் பூங்காவில் இருந்து கோடம்பாக்கம் நிலையம் நோக்கி சுரங்கம் தோண்டும் பணியயை தொடங்கி, 2047மீட்டர் நீளத்திற்கு சுரங்கப்பாதை அமைக்கும் பணியை வெற்றிகரமாக முடித்துவிட்டு ஆற்காடு சாலையில் மீனாட்சி கல்லூரிக்கு அருகில் கோடம்பாக்கம் நிலையத்தை இன்று (23.07.2025) வந்தடைந்தது. கலங்கரை விளக்கத்திலிருந்து பூந்தமல்லி புறவழிச்சாலை வரை 26.8 கி.மீ நீளத்தில் 12 சுரங்கப்பாதை நிலையங்கள் மற்றும் 18 உயர்த்தப்பட்ட நிலையங்களை கொண்ட வழித்தடம்-4-இன் வளர்ச்சியில் இந்த சாதனை ஒரு முக்கிய படியாகும்.

பனகல் பூங்கா மற்றும் கோடம்பாக்கம் இடையிலான இந்த சுரங்கப்பாதை பிரிவு 2-ஆம் கட்டத்தின் மிகவும் நீளமான சுரங்கப்பாதை பிரிவாகும். இதில் சுரங்கம் தோண்டும் இயந்திரம் மயில் 190 கட்டிடங்கள் வழியாக செல்ல வேண்டியிருந்தது, அவற்றில் பெரும்பாலும் குடியிருப்பு கட்டிடங்கள், அவற்றில் 50-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் பழைய கட்டிடங்கள். மேலும், பல ரயில் பாதைகளைக் கடப்பதற்கு முன்பு, செயலில் உள்ள இரயில் பாதைக்கு இணையாக சுரங்கப்பாதையை துளையிட வேண்டியிருந்தது. இந்த சுரங்கப்பாதை இரண்டு தேவாலயங்கள் வழியாகவும், கோடம்பாக்கம் மேம்பாலத்திற்குக் கீழேயும் சென்றது.

சவால்கள் இருந்தபோதிலும், 2.047 கி.மீ நீளமுள்ள இந்த சுரங்கப்பாதை, பொதுமக்களுக்கும் தற்போதுள்ள போக்குவரத்திற்கும் எவ்வித இடையூறும் இல்லாமல் சுரங்கப்பாதை பணியை நிறைவு செய்ததுள்ளது.

இந்நிகழ்வை, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் தி.அர்ச்சுனன், ஐடிடி சிமென்டேஷன் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஜெயந்த பாசு, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் தலைமை பொது மேலாளர்கள் ரேகா பிரகாஷ், (திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு), எஸ்.அசோக் குமார், (வழித்தடம் மற்றும் உயர்மட்ட கட்டுமானம்), தலைமை ஆலோசகர் டாக்டர் ராஜீவ் கே ஸ்ரீவஸ்தவா (சுற்றுச்சூழல்), பொது மேலாளர் ஆர். ரங்கநாதன் (கட்டுமானம்),

பொது ஆலோசகர் நிறுவனத்தின் குழுத் தலைவர் சி. முருகமூர்த்தி, பொது ஆலோசகர் நிறுவனத்தின் தலைமைப் பொறியாளர் ஜஸ்பிரீத் சிங் கோச்சர், ஐடிடி சிமென்டேஷன் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் சுபாஷிஷ் முகர்ஜி, திட்ட மேலாளர் எம்.ஜி. சம்போசங்கரன், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், ஐடிடி சிமென்டேஷன் நிறுவனம் மற்றும் பொது ஆலோசகர் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தளத்தில் இருந்து பார்வையிட்டனர். சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இந்தச் சாதனை, சென்னையில் மெட்ரோ இரயிலை விரிவுபடுத்துவதற்கும், நகரின் பெருகிவரும் மக்களுக்குத் திறமையான, நம்பகமான போக்குவரத்தை வழங்குவதற்கும் அதன் அர்ப்பணிப்பைக் காட்டுகிறது. இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.