பம்பை நதியில் பக்தர்கள் உடைகளை வீசுவதை தடுக்க வேண்டும்: தேவசம் போர்டுக்கு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு
திருவனந்தபுரம்: நதி அசுத்தமாவதால் பம்பையில் பக்தர்கள் உடைகளை வீசுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சபரிமலை பக்தர்கள் பம்பை நதியை புனிதமாக கருதுகின்றனர். தரிசனத்திற்கு வரும் பெரும்பாலான பக்தர்கள் இந்த நதியில் நீராடிய பின்னர்தான் சன்னிதானத்திற்கு செல்கின்றனர். சமீபத்தில் சபரிமலை வந்த ஜனாதிபதி திரவுபதி முர்மு பம்பை நதியில் இறங்கி கால்களை நனைத்த பின்னரே தரிசனத்திற்கு சென்றார்.
இந்நிலையில் சபரிமலை வரும் பக்தர்கள் பம்பையில் குளித்த பின்னர் தாங்கள் உடுத்திய வேஷ்டி, சட்டை உள்பட ஆடைகளை நதியிலேயே விட்டுவிடுகின்றனர். கங்கை நதியில் செய்வது போல இது ஒரு ஆச்சாரம் என்று கருதி பக்தர்கள் இந்த செயலில் ஈடுபடுகின்றனர். இதன் மூலம் பம்பை நதி அசுத்தமாகிறது. இதனால் பம்பை நதியில் சேரும் ஆடைகளை எடுப்பதற்காக தேவசம் போர்டு குத்தகைக்கு விட்டுள்ளது.
ஆனால் இவர்கள் நதியில் மேலோட்டமாக வரும் ஆடைகளை மட்டுமே எடுக்கின்றனர். அடிப்பகுதியில் சிக்குபவற்றை இவர்கள் எடுப்பதில்லை. இதன்மூலம் இந்த ஆடைகள் ஆங்காங்கே சிக்கி சுற்றுப்புற சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. இது தொடர்பாக சபரிமலை சிறப்பு ஆணையாளர் கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு அறிக்கை தாக்கல் செய்தார்.
இதை விசாரித்த உயர்நீதிமன்றம், சபரிமலையில் பக்தர்கள் உடைகளை வீசுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க தேவசம் போர்டுக்கு உத்தரவிட்டது. பம்பை நதியில் ஆடைகளை வீசுவது ஆச்சாரமல்ல. இது தொடர்பாக பக்தர்களிடையே தேவசம் போர்டு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பம்பை நதிக்கரையிலும், கேரள அரசு பஸ்களிலும் இது தொடர்பாக அறிவிப்பு செய்ய வேண்டும் என்று கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
* 1 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் குவிந்தனர்
சபரிமலையில் நேற்றும் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தரிசனம் செய்தனர். பக்தர்கள் வருகை அதிகரித்த போதிலும் தரிசனத்திற்கு கூடுதல் வசதிகள் செய்யப்பட்டிருப்பதால் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்காமல் அனைவரும் எளிதில் தரிசனம் செய்து வருகின்றனர். சபரிமலையில் கடந்த 13 நாளில் 11.40 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.
* சபரிமலை பக்தர்கள் இருமுடியை விமானத்தில் எடுத்து செல்ல அனுமதி
மத்திய சிவில் விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது: தென்னிந்தியாவில் இருந்து ஐயப்ப சுவாமிக்கு மாலை அணிந்து சபரிமலைக்கு யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள் விமானத்தில் இருமுடி கொண்டு செல்ல அனுமதி இல்லை என்ற தகவல் எனது கவனத்திற்கு வந்தது.
அதனடிப்படையில், பாதுகாப்பு நிபந்தனைகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டு, பக்தர்கள் தங்களுடன் இருமுடி எடுத்து செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று (நேற்று) முதல் இருமுடி விமானத்தில் கொண்டு செல்ல அனுமதிக்கப்படும். வரும் ஜனவரி 20ம் தேதி வரை, மண்டலம் முதல் மகர ஜோதி வரை இந்த வசதி ஏற்படுத்தி தரப்படும் என்று கூறியுள்ளார்.

