சென்னை: இன்று (10.10.2025) மேயர் ஆர்.பிரிய , பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் 1 முதல் 15 வரையிலான அனைத்து மண்டலங்களிலும் 1.50 இலட்சம் பனை விதைகள் நடும் பணியினைத் தொடங்கி வைக்கும் விதமாக, பெருங்குடி மண்டலம், பாலவாக்கம் கடற்கரையில் பனை விதையினை நட்டு தொடங்கி வைத்தார் .
மேலும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் “நம்ம தங்கா” விழிப்புணர்வு சின்னத்தினை அறிமுகப்படுத்தினார். பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பசுமைப் பரப்பினை அதிகரிக்கும் வகையில், கடந்த நான்கரை ஆண்டுகளில் மொத்தம் 4,26,429 எண்ணிக்கையிலான பாரம்பரிய நாட்டு வகை மரங்கள் நட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும் புதிய மரக்கன்றுகள் நடும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது .
தமிழ்நாடு முதலமைச்சர் பனை மரங்களை தமிழ்நாட்டில் அதிகளவில் நடுவதற்கு உத்தரவிட்டு, அதன்படி தமிழ்நாடு முழுவதும் பனை விதைகள் நடும் பணி பெரும் இயக்கமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக , கடல் அரிப்பினைத் தடுத்து, கடல் சீற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகளை குறைத்திடும் வகையில், மக்களுக்கு நலன் தரும் மரமாக, தமிழ்நாட்டின் மரமான பனைமரத்தின், விதைகளை பெருநகர சென்னை மாநகராட்சி கடற்கரைப் பகுதிகள் மற்றும் குளக்கரைப் பகுதிகள் உள்ளிட்ட பகுதிகளில் மாபெரும் பனை மர விதைகளை விதைக்கும் பணி நடைபெற்றது.
இதில் சென்னை கடற்கரைப் பகுதிகளில் உள்ள 45 இடங்களில் சுமார் 85,000 பனை விதைகளும், 41 நீர்நிலைப் பகுதிகளில் 65,000 பனை விதைகளும் நடப்படுகிறது.
நடவு செய்யப்படும் பனை விதைகள் பெருநகர சென்னை மாநகராட்சி மூலம் “Udavi APP”-ல் Geotagging செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் நடவு செய்யும் இடங்களை களஆய்வு செய்து முளைத்த பனை கன்றுகளை பராமரிக்க இயலும். பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதியில் பனை விதைகள் நடும் பணிக்காக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து குறிப்பாக பனை மரங்கள் அதிகம் காணப்படும் இராமநாதபுரம் மற்றும் தருமபுரி போன்ற மாவட்டங்களில் இருந்து பனைமர விதைகள் கொண்டு வரப்பட்டுள்ளது. இப்பணியானது, பெருநகர சென்னை மாநகராட்சியுடன் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், சென்னைப் பல்கலைக்கழகம், தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம், தமிழ்நாடு தன்னார்வலர்களுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டது.
இந்நிகழ்வில், சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் ச.அரவிந்த் ரமேஷ், மாநகராட்சி ஆணையர் ஜெ. குமரகுருபரன், தெற்கு வட்டார துணை ஆணையர் அஃதாப் ரசூல், மண்டலக்குழுத் தலைவர்கள் எஸ்.வி. ரவிச்சந்திரன் (பெருங்குடி), வி.இ.மதியழகன் (சோழிங்கநல்லூர்), நிலைக்குழுத் தலைவர் (கல்வி) பாலவாக்கம் த.விஸ்வநாதன், மாமன்ற உறுப்பினர் டாக்டர் தமிழரசி சோமு மற்றும் அலுவலர்கள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.