Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

பனை விதைகள் விதைப்பு திட்டத்திற்கு வரவேற்பு தமிழகம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்: ஜவாஹிருல்லா வேண்டுகோள்

சென்னை: மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசின் பசுமை தமிழ்நாடு இயக்கம் சார்பில் திருச்சி மாவட்டத்தில் மட்டும் 20.7 லட்சம் பனை விதைகள் அடுத்த ஒரு ஆண்டுக்குள் விதைக்கப்படும் திட்டத்தை வரவேற்கிறேன். இந்த முயற்சி, வனத்துறை, உள்ளூர் மக்கள், மாணவர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் ஆகியோரின் கூட்டுப் பங்களிப்புடன் முன்னெடுக்கப்படுவது சிறப்பிற்குரியது.

மண் ஈரப்பதத்தைப் பாதுகாக்கவும், நிலத்தடி நீரை மீட்டெடுக்கவும், சூழலியல் சமநிலையைப் பேணவும், பனை மரங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. பனை மரம் தமிழரின் அடையாளம், இயற்கையின் காவலன். ஒருகாலத்தில் கிராமங்களின் பொருளாதாரமும் பசுமையும் பனைமரங்களோடு இணைந்திருந்தது. இன்று அதனை மீண்டும் உயிர்ப்பிக்கும் தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கை பாராட்டுக்குரியது.

இந்தத் திட்டம் வெற்றியடைய மக்கள் பங்கெடுப்பு மிக அவசியம். ஒவ்வொரு கிராமமும், பள்ளிகளும், இளைஞர் குழுக்களும் இணைந்து பனை விதை விதைப்பில் பங்கு கொள்ள வேண்டும். பனை விதைகள் விதைப்பது மட்டும் போதாது, அவற்றைப் பாதுகாப்பதும் வளர்ப்பதும் ஒவ்வொரு குடிமகனின் பொறுப்பாக இருக்க வேண்டும்.

இத்தகைய திட்டங்கள் மாநிலத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நிலைத்த வளர்ச்சி மற்றும் பசுமை தமிழகம் உருவாக்கும் முயற்சிக்கு அடித்தளமாக இருக்கும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இதே திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.