பள்ளிபாளையம் கொங்கு திருப்பதி கோயிலில் அமைச்சர் முத்துசாமியுடன் அதிமுக மாஜி தங்கமணி சந்திப்பு: அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு
பள்ளிபாளையம்: நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் கொங்கு திருப்பதி கோயில், நீதிமன்ற தீர்ப்பால் கடந்த 3 வருடங்களாக பூட்டப்பட்டிருந்தது. கூட்டுறவுத்துறை அமைச்சர் முத்துசாமியின் முயற்சியால், இக்கோயில் இந்துசமய அறநிலையத் துறை வசம் ஏற்கப்பட்டது. கடந்த வாரம் 24ம் தேதி சுதர்சன யாகம் நடைபெற்று, பக்தர்களின் தரிசனத்துக்கு திறக்கப்பட்டது. கோயிலுக்கு அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டு, தினந்தோறும் பூஜைகள் நடைபெற்று வருகிறது. நேற்று பவுர்ணமி மற்றும் நட்சத்திர பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.
நேற்று காலை, குமாரபாளையம் தொகுதி எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான தங்கமணி அதிமுக கட்சி நிர்வாகிகளுடன் சுவாமி தரிசனம் செய்ய கோயிலுக்கு வந்தார். பின்னர், கோயிலில் சிறிது நேரம் காத்திருந்தார். அப்போது, கூட்டுறவுத்துறை அமைச்சர் முத்துசாமி, ஈரோடு எம்எல்ஏ சந்திரகுமார் ஆகியோர் கோயிலுக்கு வந்தனர். அமைச்சர் முத்துசாமி வணக்கம் தெரிவிக்க, அவரை தங்கமணி எம்எல்ஏ கை கொடுத்து, கோயிலுக்குள் அழைத்து சென்றார். பின்னர், கோயில் வளாகத்தை சுற்றிவந்து ஆலோசித்தனர்.
சுமார் அரைமணி நேரம், அமைச்சர் முத்துசாமியும், முன்னாள் அமைச்சர் தங்கமணியும் ஆலோசனை நடத்தி விட்டு, அங்கிருந்து புறப்பட்டுச்சென்றனர். இந்த சந்திப்பு குறித்து கூட்டுறவுத்துறை அமைச்சர் முத்துசாமி கூறுகையில், ‘நீண்ட காலமாக பூட்டியிருந்த கோயிலை இந்து சமய அறநிலையத்துறை ஏற்று திறந்துள்ளது. கோயில் வளாகத்தில் மேலும் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து, தொகுதியின் எம்எல்ஏ தங்கமணியுடன் ஆலோசனை செய்யப்பட்டது. மற்றபடி அரசியல் ஏதும் பேசவில்லை,’ என்றார். ஆளும் திமுக அமைச்சரும், எதிர்கட்சி எம்எல்ஏவான தங்கமணியும் சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

