பள்ளிபாளையம்: பள்ளிபாளையத்தில் தொழிலாளர்களிடம் கிட்னி திருட்டு தொடர்பாக மீண்டும் எழுந்துள்ள புகார்கள் தொடர்பாக, மாவட்ட மருத்துவ துறை இணை இயக்குனர் விசாரணை மேற்கொண்டார். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம், விசைத்தறி நெசவாளர்கள் நிறைந்த பகுதி. இங்கு கடந்த 30 ஆண்டுகளாக தொழிலாளர்களிடம் கிட்னி திருடுவதாக பிரச்னைகள் கிளம்பி வருகிறது. பிரபல மருத்துவமனைகளில் கிட்னி மாற்று அறுவை சிகிச்சைக்காக, தற்போது ரூ.15 லட்சம் வரை கட்டணம் வாங்கப்படுகிறது.
இதில் கிட்னி தானம் செய்பவர்களுக்கு, ரூ.10 லட்சம் வரை வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. பண நெருக்கடியில் சிக்கியுள்ள பலரும், தனியார் மருத்துவமனையில் தங்களது ஒரு சிறுநீரகத்தை தானமாக வழங்கி விட்டு, அதற்கான தொகையை பெற்று வருகின்றனர். ஒரு முறை கிட்னி வழங்குவோர், தமக்கு தெரிந்த சிலரையும் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று, கிட்னியை தானம் செய்ய வைக்கின்றனர்.
இவர்கள் பல ஆண்டுகளாக இதுபோல் புரோக்கர்களாக செயல்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. மருத்துவமனையில் இவர்களுக்கு தனியாக கமிஷன் வழங்கப்படுகிறது. புரோக்கர்கள் பலர் போலியான ஆவணங்களை தயார் செய்து, தானம் வழங்குவோரை மருத்துவமனை நிர்வாகத்திற்கு அறிமுகப்படுத்துகின்றனர். ஆவணங்களை சரி பார்க்கும் மருத்துவமனை நிர்வாகத்தினர், கிட்னி தேவைப்படும் நோயாளிகளையும், தானம் செய்வோர்களையும் ஒரே நாளில் அழைத்து, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்கின்றனர்.
கடந்த சில நாட்களாக, பள்ளிபாளையம் கோரக்காட்டுவலசு பகுதியில், ஒருவர் கிட்னி விற்பனை செய்தால் ரூ.10 லட்சம் வரை பணம் கிடைக்குமென ஏழைத்தொழிலாளர்களிடம் ஆசைவார்த்தை கூறி அழைப்பதாக, சமூக வலைதளங்களில் புகார் கிளம்பியது. இதையடுத்து நாமக்கல் மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குனர் ராஜ்மோகன், நேற்று பள்ளிபாளையம் வந்தார்.
அவர் பிரச்னைக்குரிய புரோக்கர் வீட்டிற்கு சென்று விசாரணை மேற்கொண்டார். புரோக்கரின் வீடு பூட்டியிருந்ததால், அருகில் உள்ள வீட்டை சேர்ந்தவர்களிடம் அவர் விசாரணை மேற்கொண்டு, விவரங்களை பதிவு செய்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
* குற்றவாளிகள் தப்பமுடியாது அமைச்சர் எச்சரிக்கை
மதுரை, திருப்பாலையில் நகர்புற ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் நேற்றுமாலை நடந்த நிகழ்ச்சியில் 31 மருத்துவ கட்டிடங்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் மற்றும் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி ஆகியோர் திறந்து வைத்தனர்.
பின்னர் அமைச்சர் மா.சுப்ரமணியன் அளித்த பேட்டியில், உடல் உறுப்பு தானம் என்பது மனிதநேய நடவடிக்கை. அதை விற்பனை செய்வது மனிதநேயமற்ற செயல். அதை செய்பவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்கள். அது கடும் குற்றம். அவ்வகையில், நாமக்கல் விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. குற்றவாளிகள் தப்பவே முடியாது என்றார்.