*பொதுமக்கள், வியாபாரிகள் மகிழ்ச்சி
பள்ளிகொண்டா : பள்ளிகொண்டா பேரூராட்சியில் ரூ.1.35 கோடியில் மேம்படுத்தப்பட்ட வாரச்சந்தை நேற்று முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்ததால் பொதுமக்கள், வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.பள்ளிகொண்டா பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை பேரூராட்சி அருகே தேசிய நெடுஞ்சாலையோரம் நடைபெறும் வாரச்சந்தையில் காலையில் கோழிகள் விற்பனையும், மாலை நேரத்தில் காய்கனிகள் விற்பனையும் நடைபெற்று வருகின்றன.
அப்போது, பள்ளிகொண்டா பகுதி மக்கள் மட்டுமில்லாமல் சுற்றுப்புற கிராமங்களிலிருந்து ஏராளமான விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை விற்பனை செய்யவும், காய்கனிகளை வாங்கி செல்லவும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பள்ளிகொண்டா வாரச்சந்தைக்கு வந்து செல்கின்றனர்.
நாளுக்கு நாள் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து வந்த நிலையில், வெயில் மற்றும் மழைக்காலங்களில் மேற்கூரை இல்லாமல் வியாபாரிகள் அவதிப்பட்டு வந்தனர். மேலும், மழை நேரத்தில் சேறும் சகதியுமாக மாறிவிடுவதால் பொதுமக்களும் வருகையும் குறைந்து விடும்.
இந்நிலையில், வாரச்சந்தை வளாகத்தினை மேம்படுத்த கடந்த 2023ம் ஆண்டு ரூ.1.35 கோடி நிதி ஒதுக்கீடு செய்து திட்டப்பணிகள் தீட்டப்பட்டது. அதனை தொடர்ந்து வாரச்சந்தையை மேம்படுத்தும் பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. இதனிடையே தற்காலிகமாக வாரச்சந்தை பேரூராட்சி அருகிலுள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், ரூ.1.35 கோடியில் மேம்படுத்தப்பட்ட வாரச்சந்தையை கடந்த மே 29ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அதனையடுத்து வாரச்சந்தை நேற்று முதல் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வந்தது. இதனால் பொதுமக்களும், வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
பார்க்கிங் வசதி ஏற்படுத்த கோரிக்கை
பள்ளிகொண்டா வாரச்சந்தைக்கு வரும் பொதுமக்கள் இருசக்கர வாகனங்கள், கார்களை சர்வீஸ் சாலையிலேயே நிறுத்திவிட்டு செல்கின்றனர். மேலும், சில கடைகள் சர்வீஸ் சாலையோரமே வைத்து வியாபாரம் செய்வதால் பள்ளிகொண்டா பேருந்து நிலையத்திற்கு வரும் பேருந்துகள், ஆட்டோ, ஆம்புலன்ஸ் உட்பட வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றன. இதனால், வாரச்சந்தைக்கு வரும் வாகனங்களை நிறுத்த தனியாக பார்க்கிங் வசதி ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.