Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பள்ளிக்கரணை சதுப்பு நில காப்புக்காடு பகுதியில் எந்தவித கட்டுமானங்களுக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை: ‘வனத்துறைக்கு சொந்தமான பாதுகாக்கப்பட்ட பகுதி’ என அறிவிப்பு

சென்னை: பள்ளிக்கரணை சதுப்பு நில காப்புக்காடு பகுதியில் எந்தவிதமான கட்டுமானங்களுக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை. இது வனத்துறைக்கு சொந்தமான பாதுகாக்கப்பட்ட பகுதியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை பள்ளிக்கரணை காப்புக்காடு ராம்சார் தலத்திற்குள், ஒரு அடுக்குமாடி கட்டிட திட்டத்திற்கு, சுற்றுச்சூழல் அனுமதி மற்றும் திட்ட ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து கீழ்க்கண்ட தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. பள்ளிக்கரணை பகுதியில், சுமார் 698 ஹெக்டேர் பரப்பளவு, பள்ளிக்கரணை சதுப்பு நில காப்புக்காடாக 2007ம் அறிவிக்கப்பட்டது.

இந்த இடத்தில எவ்விதமான கட்டுமானங்களுக்கும் அனுமதி அளிக்கப்படுவதில்லை. இது வனத்துறைக்கு சொந்தமான பாதுகாக்கப்பட்ட பகுதியாகும். ராம்சார் தலமாக அறிவிக்கப்பட்டுள்ள 1248 ஹெக்டேர் பரப்பளவில், பள்ளிக்கரணை சதுப்பு நில காப்புக்காட்டில் உள்ள 698 ஹெக்டேர் நிலமும், உரிய நடைமுறைகளுக்கு பின்பு வரையறுக்கப்படவுள்ள 550 ஹெக்டேர் கூடுதல் நிலமும் அடங்கும். ஈர நில விதிகளின்படி பள்ளிக்கரணை சதுப்பு நில காப்புக்காடுகளுக்கு வெளியில் உள்ள நிலப்பகுதிகளை சர்வே எண்களுடன் கண்டறிந்து வரையறுப்பதற்கான நில உண்மை கண்டறிதல் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.

ஊடகங்களில் குறிப்பிடப்படும் கட்டுமானம் குறித்த நிலத்தின் புல எண்கள் வருவாய்த்துறை ஆவணங்களின்படி இத்தகைய தனியார் பட்டா நிலங்கள் ஆகும். தற்போது, தேசிய நிலையான கடற்கரை மேலாண்மை மையம், பள்ளிக்கரணை காப்புக்காடு ராம்சார் தலத்திற்கான ஒருங்கிணைந்த மேலாண்மை திட்டத்தை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. ராம்சார் தலத்தை அறிவிக்கும் செயல்முறை, ராம்சார் தலத்திற்குள் உள்ள சர்வே எண்கள் உள்பட வரைபடம் மற்றும் திட்டத்தை பொது களத்தில் வைப்பதாகும் என்பது தெளிவாகிறது. மேலும், ராம்சார் தலமாக அறிவிக்கும் செயல்முறையின் ஒரு பகுதியாக, இதனை 60 நாட்களுக்குள் ஒரு பொது ஆலோசனைக்கு உட்படுத்துவது என்ற செயல்முறையும் வரையறுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, ஆட்சேபனைகள் தெரிவிக்கும் நபர்களிடம் இருந்து பெறப்பட்ட கருத்துகள் அல்லது பரிந்துரைகளை பரிசீலித்து அதனை நிவர்த்தி செய்ய மாநில அரசுக்கு 240 நாள் காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது. எனவே, செய்தித்தாள் கட்டுரைகளில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றவை. தற்போதைய பள்ளிக்கரணை சதுப்பு நில காப்புக்காட்டு எல்லைகளுக்கு வெளியே உள்ள தனியார் பட்டா நிலங்களுக்கு மட்டுமே சம்பந்தப்பட்ட அலுவலர்களால் ஒப்புதல்கள் வழங்கப்பட்டுள்ளது.