பல்லாவரம் வாரச் சந்தையில் உணவு பாதுகாப்பு துறையினர் சோதனை: மூட்டை மூட்டையாக சிக்கிய காலாவதியான தின்பண்டங்கள்
சென்னை: சென்னையை அடுத்த பல்லாவரம் சந்தையில் நடத்தப்பட்ட உணவு பாதுகாப்பு துறை சோதனையில் மூட்டை மூட்டையாக காலாவதியான தின்பண்டங்கள் பறிமுதல் செய்தனர். சென்னை பல்லாவரம் பகுதியில் வெள்ளிக்கிழமை மட்டுமே செயல்படும் முக்கிய சந்தையில் இன்று உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீரென சோதனை மேற்கொண்டனர். சந்தையில் 2000க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இங்க சென்னை, திருவள்ளூர், திண்டிவனம், காஞ்சிபுரம் போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து பொருட்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. சோதனையில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டம் உணவு பாதுகாப்பு அதிகாரி ரமேஷ் பாபு தலைமையில் 10 அதிகாரிகள் பங்கேற்றனர்.
அப்பொழுது ஆவடி பகுதியை சேர்ந்த ஐயப்பன் என்பவரின் கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்ட பிஸ்கட், சாக்லேட், சேமியா, நூடுல்ஸ் போன்ற பொருட்கள் தயாரிப்பு தேதி காலாவதியாகி இருந்தது. மேலும் பேக்கிங் செய்யப்பட்ட அரிசிகள் எந்த நிறுவனத்தின் பெயர் உணவு அங்கீகாரம் இல்லாமல் கெட்டு போய் இருந்தது. பின்னர் பிஸ்கட், சாக்லேட், சேமியா, அரிசி உள்ளிட்ட 500 கிலோ பொருட்களை பறிமுதல் செய்தனர். அவற்றை பல்லாவரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்த பொருட்கள் யாரிடம் இருந்து வாங்கினார்கள் என்பது குறித்து விசாரணை நடைபெறும் என்றும் இதில் சம்மந்தப்பட்டவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
