வாலாஜாபாத்: வாலாஜாபாத் அருகே அவளூர் கிராமத்தில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள அவளூர் சாலை மற்றும் பாலாற்று தரைப்பாலத்தின் வழியாக அங்கம்பாக்கம், ஆசூர், மாகரல், ஆர்ப்பாக்கம் உள்பட பல்வேறு பகுதிகளில் செயல்படும் கல்குவாரிகளுக்கு நாள்தோறும் 24 மணி நேரமும் 100க்கும் மேற்பட்ட கனரக லாரிகள் சென்று வருகின்றன. இவைகளில் எம்சாண்ட், ஜல்லி கற்கள் உள்பட பல்வேறு கட்டுமான பணிகளுக்கு தேவையான பொருட்கள் எடுத்து செல்லப்படுகின்றன. இதனால் அவளூர் கிராம மக்கள் வாகன நெரிசலால் கடும் அவதிப்பட்டு வந்தனர்.
இதைத் தொடர்ந்து, பாலாற்று தரைப்பாலத்தின் வழியாக சென்று வரும் கனரக லாரிகளுக்கு நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. எனினும், இந்த நேர கட்டுப்பாட்டை மீறி கல்குவாரிகளுக்கு ஏராளமான கனரக லாரிகள் இரவுபகலாக இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இன்று காலை பாலாற்று தரைப்பாலத்தின் வழியாக கல்குவாரிகளுக்கு சென்ற கனரக லாரிகளை கிராம மக்கள் சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்ததும் வாலாஜாபாத் காவல் நிலைய எஸ்ஐ மணிகண்டன் தலைமையில் போலீசார் விரைந்து வந்து, சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். போலீசாரிடம் பாலாற்று தரைப்பாலத்தின் வழியாக காலை 7 முதல் 10 மணிவரை, மாலை 4 முதல் 6 மணிவரை கனரக லாரிகள் செல்வதற்கு நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. எனினும், இன்று அதிகாலை முதல் கனரக லாரிகள் சென்று வருவதால் வாகன நெரிசலில் அனைவரும் அவதிப்பட்டு வருகிறோம். நேரக் கட்டுப்பாட்டை மீறிய லாரிகள் போலீசார் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.