``விவசாயம் என்பது நமது கலாச்சாரம். மக்களுக்கு உணவு கொடுக்கக்கூடிய இந்த விவசாயத்தை நாம் செய்யாவிட்டாலும் பரவாயில்லை, ஆனால் விவசாய நிலத்தை தரிசாக மட்டும் போடக்கூடாது என எனது அப்பா அடிக்கடி சொல்லுவார். அவர் சொன்ன வார்த்தைதான் எனது நிலத்தை எப்போதும் பசுமையாக வைத்திருக்கிறது’’ என உணர்வுபூர்வமாக பேச ஆரம்பித்தார் விவசாயி சங்கர். தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டத்திற்கு உட்பட்ட மல்லுப்பட்டி கிராமத்தை பூர்வீகமாகக் கொண்ட இவர், தனக்குச் சொந்தமான 12 ஏக்கர் நிலத்தில் 20 வகையான சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்களை வளர்த்து பெரும் உணவுக்காட்டையே உருவாக்கி இருக்கிறார். அவரைச் சந்தித்தபோதுதான் இவற்றைப் பகிர்ந்துகொண்டார்.
``அந்தக் காலத்திலேயே நாங்கள் இயற்கை முறை விவசாயம்தான் செய்துவந்தோம். நெல், கரும்பு, காய்கறி தொடங்கி வாழை, மஞ்சள், மா என செய்யாத விவசாயமே கிடையாது. 30 வருடங்களுக்கு முன்பே எல்லா வகையான விவசாயமும் செய்தாச்சு. ஒரு கட்டத்தில் விவசாயத்தை தொடரமுடியாத சூழல். எந்தப் பட்டத்திலும், எந்தப் பயிரையும் சாகுபடி செய்ய முடியாது என உணர்ந்த அந்த சமயத்தில் ‘நிலத்தை சும்மா போடக்கூடாது’ என அப்பா சொன்ன ஒரு வார்த்தைதான் எனக்கு ஞாபகம் வந்தது. நமது நிலத்தை ஏன் தரிசாக போட வேண்டும்? அதில் மரப்பயிர்களை வளர்க்கலாமே! அதுவும் ஒரு விவசாயம்தானே என தோன்றியது. அதன்படி மரக்கன்றுகளை வாங்கி நடவு செய்ய ஆரம்பித்து விட்டேன்.
15 வருடங்களுக்கு முன்பு கரும்பு, நெல், கடலை, தக்காளி, வெண்டை என பல பயிர்கள் விளைந்த நிலம் இது. தற்போது இதை ஒரு உணவுக்காடாக மாற்றி இருக்கிறேன்’’ எனக்கூறியபடியே தோட்டத்திற்குள் அழைத்துச் சென்ற சங்கர் தனது தோட்டம் உருவான கதையை முன்னும் பின்னுமாக ஞாபகப்படுத்திப் பேசினார். ``குறுகிய காலப் பயிர்களில் இருந்து மரப்பயிர் சாகுபடிக்கு மாறி 15 வருடங்கள் ஆகிவிட்டது. இத்தனை ஆண்டுகளில் ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு ஏக்கர் என்ற அளவில் மரங்கள் நடுவதையே லட்சியமாக வைத்திருக்கிறேன். அதன்படி 12 ஏக்கர் முழுவதையும் 12 வருடங்களில் மரம் நட்டு முடித்து விட்டேன்.
அதேபோல், மரப்பயிர் சாகுபடி என முடிவுசெய்தபோது, அதனை இரண்டு விதங்களில் சாகுபடி செய்ய வேண்டும் என திட்டமிட்டேன். ஒன்று நீண்ட வருடங்கள் கழித்து பலன் அளிக்கக்கூடிய நாட்டு மரங்களை நடுவது. அதாவது தேக்கு, மகோகனி, பூவரசு, புங்கை, மருதமரம், மலைவேம்பு, குமிழ் தேக்கு போன்றவற்றை நடுவது. மற்றொன்று, இலந்தை, அத்தி, நெல்லி, எலுமிச்சை, மாதுளை, மா, பலா, பப்பாளி, வாழை, சீத்தா போன்ற பழமரங்களை நடுவது. அதன்படி இந்த இரண்டு வகையான மர சாகுபடியையுமே தொடங்கினேன். இதுபோக, தென்னையும் வைத்திருக்கிறேன். இப்போது எனது நிலத்தில் 20க்கும் அதிகமான ரகங்களில் பல்வேறு மரங்கள் இருக்கின்றன. 10 முதல் 12 வருடங்கள் ஆன மரங்கள் சுமார் 2000 எண்ணிக்கையிலும் 2 முதல் 5 ஆண்டுகள் மரம் 2000 எண்ணிக்கையிலும் இருக்கின்றன.
விவசாயத்தில் ஒவ்வொரு பட்டத்திற்கும் விளைச்சல் எடுத்து வருமானம் பார்ப்பது போல மரப்பயிர் சாகுபடியில் வருமானம் பார்க்க முடியாது என பலரும் நினைத்திருக்கிறார்கள். ஆனால், அது உண்மையில்லை. மரப்பயிர் சாகுபடியிலும் வருமானம் பார்க்கலாம். ஆனால், அதனை எப்படி சாகுபடி செய்கிறோம் என்பதுதான் முக்கியம். எனது தோட்டத்தில் நாட்டு மரங்கள் போக 4 ஏக்கரில் முழுவதுமாக பழப்பயிர்தான். ஏலக்கி வாழை 1000 இருக்கிறது. மா இருக்கிறது. பலா இருக்கிறது. இதுபோன்று இன்னும் பல பழ மரங்கள் இருப்பதால், ஆண்டு முழுவதும் எல்லா பழ சீசன் வரும்போதும் எனது தோட்டத்தில் இருக்கிற பழங்களில் இருந்து நான் வருமானம் பார்க்கிறேன். போன மாதம் கூட, சீத்தா மற்றும் மா வில் இருந்து எனக்கு 20 ஆயிரம் வருமானம் கிடைத்தது.
அது இல்லாமல், மாதாமாதம் சுமார் 300 கிலோ வாழைத்தார்களை விற்பனை செய்கிறேன். கூடவே வாழை இலைகளையும் விற்பனை செய்கிறேன். எப்படிப் பார்த்தாலும் பழ மரங்களில் இருந்து மாதம் ரூ.20 ஆயிரம் வருமானம் பார்த்துவிடுவேன். இதுபோக, வருடாவருடம் 300 முதல் 400 நாட்டு மரங்களை வெட்டி விற்பனை செய்வோம். இந்த வருடம் கூட நன்கு வளர்ந்த மலைவேம்பு மரங்களை வெட்டி விற்பனை செய்தோம். அதில் இருந்து மட்டும் எங்களுக்கு 6 லட்சம் கிடைத்தது. இது ஒரு வகை சுழற்சி முறை விவசாயம்தான். அதிலும் நல்ல வருமானத்தோடு கூடிய விவசாய முறை இது’’ என அனுபவ முதிர்ச்சியோடு பேசி முடித்தார்.
தொடர்புக்கு:
சங்கர்: 96292 33033.
மறுதாம்பின் மகிமை!
எனது தோட்டத்தில் உள்ள வேம்பு, தேக்கு போன்ற நாட்டு மரங்கள் அனைத்தும் மறுதாம்பு முறையில் மீண்டும் வளர்பவை. அந்த வகையில் ஒருமுறை நட்டு வைத்தால் அந்த மரம் வெட்டிய பிறகும் கூட மீண்டும் தானாகவே வளரும். 7 வருடம் வளர்ந்த ஒரு மரம் தரும் பலனை மறுதாம்பு முறையில் மீண்டும் வளரும்போது 4-5 வருடங்களிலே தந்துவிடும் எனக் கூறுகிறார் சங்கர்.