பாலக்காடு : பாலக்காடு-திருச்சூர் சாலையில் குதிரான் மலையடிவாரம் ஐயப்பன் கோயில் பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். வனப்பகுதியை ஒட்டிய இப்பகுதிக்கு ஒற்றை காட்டு யானை அடிக்கடி ஊருக்குள் புகுந்து தோட்டப்பயிர்களை சேதப்படுத்தி, மக்களையும் அச்சுறுத்தி வருகிறது. இந்த யானையை மயக்கி ஊசி செலுத்தி பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விடவேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வந்தனர்.
அதன்பேரில் வனத்துறையினர் அந்த யானையை பிடிக்க வயநாட்டிலிருந்து விக்ரம், பரத் என்ற 2 கும்கிகளை ஐயப்பன் கோயில் பகுதிக்கு வரவழைத்து உள்ளனர். கும்கிகள் உதவியுடன் காட்டு யானையை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்த கும்கிகளை குதிரான் மலைவாழ் மக்கள் ஆர்வத்துடன் பார்த்து மகிழ்ச்சியடைந்தனர். காட்டு யானையை வனத்துறையினர் விரைவில் பிடித்து விடுவார்கள் என்ற நம்பிக்கையுடன் அப்பகுதி மக்கள் உள்ளனர்.

