அடுக்கடுக்காக குவியும் ஆபாச புகார்கள் பாலக்காடு காங்கிரஸ் எம்எல்ஏ ராகுல் மாங்கூட்டத்தில் பதவி பறிப்பா?
திருவனந்தபுரம்: மலையாள நடிகை ரினி ஆன் ஜார்ஜ் உள்பட பல இளம்பெண்களின் புகார்களைத் தொடர்ந்து பாலக்காடு தொகுதி எம்எல்ஏவும், கேரள மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவருமான ராகுல் மாங்கூட்டத்திலின் பதவியைப் பறிக்க காங்கிரஸ் மேலிடம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மலையாள சினிமாவில் இளம் நடிகைகளில் ஒருவர் ரினி ஆன் ஜார்ஜ். நேற்று கொச்சியில் நிருபர்களை சந்தித்தார். அப்போது ஒரு முக்கிய அரசியல் கட்சியை சேர்ந்த இளம் மக்கள் பிரதிநிதி சமூக வலைதளத்தில் தன்னிடம் ஆபாசமாக சாட்டிங் செய்ததாகவும், ஓட்டலுக்கு உல்லாசத்திற்கு அழைத்ததாகவும் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆனால் அந்த அரசியல் பிரமுகர் யார்? என்பதை நான் தற்போது கூற மாட்டேன் என்றவர், சில சூசகமான தகவல்களை வெளியிட்டார். அதைத்தொடர்ந்து பாலக்காடு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ராகுல் மாங்கூட்டத்தில் தான் அந்த நபர் என்று பலரும் பரபரப்பாக சமூக வலைதளங்களில் தகவல்களை பகிர்ந்தனர். இதையடுத்து நேற்று இரவே அவருக்கு எதிராக போராட்டம் தொடங்கியது.
பாலக்காட்டில் உள்ள ராகுல் மாங்கூட்டத்திலின் எம்எல்ஏ அலுவலகம் முன்பு பாஜ சார்பில் போராட்டம் நடைபெற்றது. சமூக வலைதளங்களிலும் இவருக்கு ஏராளமானோர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் கண்ணூரை சேர்ந்த எழுத்தாளரான ஹனி பாஸ்கரனும் ராகுல் மாங்கூட்டத்திலுக்கு எதிராக புகார் கூறியுள்ளார். அவர் கூறியது:
ராகுல் மாங்கூட்டத்தில் என்னுடன் சமூக வலைதளத்தில் சாட்டிங் செய்தார். இதன்பிறகு என்னைக் குறித்து பலரிடம் மிகவும் மோசமாக கூறிவந்துள்ளார். இதனால் நான் அவருடன் தொடர்பு கொள்வதை நிறுத்தி விட்டேன். பல பெண்கள் ராகுலுக்கு இரையாகியுள்ளனர். பலரும் பயந்து இதை வெளியே சொல்லவில்லை. நான் காங்கிரஸ் எம்பி ஷாபி பரம்பிலிடம் கூறினேன். அவர் தான் ராகுலை பாதுகாக்கிறார். ராகுலால் பாதிக்கப்பட்ட பல பெண்களை எனக்குத் தெரியும். விரைவில் அவர்கள் இவர் மீது புகார் கூறுவார்கள். ராகுல் மாங்கூட்டத்திலுக்கு எதிராக நான் சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதில்லை. தைரியம் இருந்தால் அவர் என் மீது மானநஷ்ட வழக்கு தொடரட்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே ராகுல் மாங்கூட்டத்தில் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி காங்கிரஸ் மேலிடத்திடம் ஏராளமான புகார்கள் சென்றுள்ளன. இதைத் தொடர்ந்து இந்தப் புகார்களை விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு காங்கிரஸ் மேலிட கேரள பொறுப்பாளரான தீபா தாஸ் முன்ஷி கேரள காங்கிரஸ் தலைவருக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.
தற்போது ராகுல் மாங்கூட்டத்தில் எம்எல்ஏவாகவும், மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவராகவும் உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன் பாலக்காட்டில் நடைபெற்ற இடைத்தேர்தலில் தான் இவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். எம்எல்ஏ பதவியை இவரிடமிருந்து பறிக்க வாய்ப்பில்லை என்றும் இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விரைவில் இவர் நீக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது.
கேரளாவில் அடுத்த வருடம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த விவகாரம் காங்கிரசுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே நடிகை ரினி ஆன் ஜார்ஜ் கூறியது: ஒரு இளம் தலைவருக்கு எதிராக நான் புகார் கூறியதை தொடர்ந்து சமூக வலைதளங்களில் எனக்கு எதிரான சைபர் தாக்குதல் அதிகரித்துள்ளது. ஆனால் நான் அதற்கெல்லாம் பயப்பட மாட்டேன். நேற்று இரவே பல பெண்கள் என்னை தொடர்பு கொண்டு அந்த நபர் குறித்து என்னிடம் பல தகவல்களை கூறினர்.
அந்த நபர் ஒரு கிரிமினல் என்றும், அவரை ஒன்றும் செய்ய முடியாது என்றும் ஒரு பெண் என்னிடம் கூறினார். பல பெண்களை இவர் தன்னுடைய இச்சைக்காக பயன்படுத்தி உள்ளார். பலரும் வீட்டிற்கும், சமூகத்திற்கும் பயந்துதான் வெளியே சொல்லாமல் உள்ளனர். அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமா என்பதை சம்பந்தப்பட்ட அவருடைய கட்சி தான் தீர்மானிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.