சிட்னி: ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 ஒருநாள் போட்டி மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. முதல் ஒருநாள் போட்டி வரும் 19ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரை முன்னிட்டு, ஆஸ்திரேலியாவின் ‘காயோ ஸ்போர்ட்ஸ்’ என்ற ஓடிடி தளம், ஒரு விளம்பர வீடியோவை வெளியிட்டது. அந்த வீடியோவில், சமீபத்தில் நடந்த ஆசிய கோப்பையில்,பாகிஸ்தான் வீரர்களுக்கு இந்திய வீரர்கள் கை குலுக்க மறுத்ததை கிண்டல் செய்து, இந்திய வீரர்களின் ‘மிகப்பெரிய பலவீனம்’ என்று வர்ணையாளர் இயன் ஹிக்கின்ஸ் கூறுகிறார்.
தொடர்ந்து, ஆஸ்திரேலிய வீரர்களான ஹேசில்வுட், மிட்ச் மார்ஷ், மேக்ஸ்வெல், அலிசா ஹீலி, அலானா கிங் மற்றும் சோபி மோலினக்ஸ் ஆகியோர் கை குலுக்கலுக்கு பதிலாக என்னென்ன வாழ்த்துக்களை தெரிவிக்கலாம் என்று தங்களது பாணியில் செய்து காட்டுகின்றனர். அதில், சோபி மோலினக்ஸ் 2 நடுவிரல்களையும் காட்டி மிக மோசமான சைகையை செய்தார். ஹேசில்வுட் துப்பாக்கியால் சுடுவது போன்றும், மற்ற வீரர்கள் கேலி செய்து சைகைளை காட்டினர். இதற்கு இந்திய ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கண்டனங்களை பதிவு செய்த நிலையில், ‘கயா ஸ்போர்ட்ஸ்’தளம் அந்த வீடியோவை நீக்கியது.