Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சர்வதேச கண்காணிப்பில் பாக். அணு ஆயுதங்கள்: பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தல்

ஸ்ரீநகர்: பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் சர்வதேச அணுசக்தி அமைப்பின் மேற்பார்வையில் கொண்டுவரப்பட வேண்டும் என்று ஒன்றிய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தி இருக்கிறார். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பின் முதன் முதலாக ஒன்றிய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று ஜம்மு காஷ்மீர் சென்றார். ஸ்ரீநகரில் பேசிய அமைச்சர் ராஜ்நாத் சிங், ‘‘தீவிரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் உறுதிப்பாடு எவ்வளவு வலிமையானது என்பதை பாகிஸ்தானின் அணுசக்தி அச்சுறுத்தலுக்கு இந்தியா செவிசாய்க்கவில்லை என்பதில் இருந்து அறிய முடியும்.

பாகிஸ்தான் எத்தனை முறை பொறுப்பற்ற முறையில் இந்தியாவுக்கு அணுசக்தி அச்சுறுத்தல்களை கொடுத்துள்ளது என்பதை முழு உலகமும் பார்த்திருக்கின்றது. இன்று ஸ்ரீநகரில் இருந்து முழு உலகிற்கும் இந்த கேள்வியை எழுப்ப விரும்புகிறேன். இவ்வளவு பொறுப்பற்ற மற்றும் வஞ்சகம் நிறைந்த நாட்டின் கைகளில் அணு ஆயுதங்கள் பாதுகாப்பானதா? பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் சர்வதேச அணுசக்தி நிறுவனத்தின் மேற்பார்வையின் கீழ் எடுக்கப்பட வேண்டும் என்று நான் நம்புகிறேன். கடந்த 35-40 ஆண்டுகளாக எல்லைக்கு அப்பால் இருந்து நடத்தப்படும் தீவிரவாதத்தை இந்தியா எதிர்கொண்டு வருகின்றது. தீவிரவாதத்துக்கு எதிராக நாம் எந்த எல்லைக்கும் செல்ல முடியும் என்பதை இன்று இந்தியா முழு உலகிற்கும் தெளிவுபடுத்தியுள்ளது” என்றார்.

* விமான நிலையத்தில் ஆய்வு

இந்தியா-பாகிஸ்தான் இடையிலான மோதலுக்கு பின், ஜம்மு காஷ்மீரில் உள்ள விமான நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டு செயல்படத்தொடங்கியுள்ளன. இந்நிலையில் ஒன்றிய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு நேற்று ஜம்முக்கு வந்தார். ஸ்ரீநகர் மற்றும் ஜம்மு விமான நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அவர் ஆய்வு செய்தார். மேலும் பாதுகாப்பு நிறுவனங்கள் மற்றும் தொடர்புடைய பங்குதாரர்களுடன் விரிவான ஆலோசனை நடத்தினார்.

* வீரர்களுக்கு ராணுவ தளபதி பாராட்டு

ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி, பாரமுல்லா மாவட்டத்தின் எல்லைக்கு அருகில் உள்ள பகுதிகளை நேற்று பார்வையிட்டார். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் ஆதிக்கம் செலுத்துவதில் அவர்களின் வீரம், உற்சாகம் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளுக்கு ராணுவ வீரர்களுக்கு அவர் பாராட்டுக்களை தெரிவித்தார். எந்தவொரு சவாலுக்கும் தீர்க்கமான பலத்துடன் பதிலளிப்பதற்கு எப்போதும் தயாராக இருக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

* ராஜஸ்தானில் பறந்த டிரோன்

ராஜஸ்தானின் ஸ்ரீகங்காநகர் மாவட்டத்தில் அனுப்கர் கிராமத்தில் வயல் ஒன்றில் டிரோன் விழுந்து கிடப்பதாக கிராம மக்கள் உள்ளூர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இது குறித்த தகவலின்பேரில் எல்லைப்பாதுகாப்பு படை மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்தில் இருந்து சுமார் 5 முதல் 7 அடி நீளமுள்ள டிரோன் பறிமுதல் செய்யப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

* மறைந்த வீரர்களுக்கு அஞ்சலி

எல்லைப்பாதுகாப்பு படை இயக்குனர் ஜெனரல் தல்ஜித் சிங் சவுத்ரி ஜம்மு எல்லையில் நேற்று பார்வையிட்டார். அப்போது ஆபரேஷன் சிந்தூரில் வீரர்களின் விலைமதிப்பற்ற பங்களிப்பை அவர் பாராட்டினார். மேலும் சவாலான சூழ்நிலையில் நாட்டின் எல்லைகளை பாதுகாப்பதில் படையின் முக்கிய பங்கை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார். எல்லையில் உயிர்தியாகம் செய்த துணை ஆய்வாளர் முகமது இம்தேயாஜ் மற்றும் மறைந்த கான்ஸ்டபிள் தீப் சிங்ககாம் ஆகியோருக்கு பிரஹாரி நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.