நியூயார்க்: பாகிஸ்தானை சேர்ந்தவர் முஹம்மது பஹ்லவன். தற்போது அமெரிக்காவில் வசித்து வரும் இவர், ஈரானில் செயல்படும் இஸ்லாமிய புரட்சிகர படையினருடன் தொடர்பு வைத்துள்ளதாக புகார் எழுந்தது. ஈரானில் இருந்து ஹவுதி கிளர்ச்சி படை உள்பட பிற தீவிரவாத அமைப்புகளுக்கு ஆயுதங்களை கடத்தி விற்று வந்ததாகவும் முஹம்மது பஹ்லவன் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
சோமாலியா நாட்டில் இருந்து தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி உதவி, ஆயுத உதவிகளை செய்ததாகவும், ஈரானில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களை அமெரிக்காவுக்கு கடத்தி சென்றதாகவும் முஹம்மது பஹ்லவன் மீது புகார்கள் எழுந்தன. இதுபோன்று இஸ்லாமிய ஆதரவு புரட்சிகர படையின் பேரழிவு திட்டங்களுக்காக ஆயுத கடத்தல், நிதி உதவி ஆகிய குற்றச்செயல்களில் முஹம்மது பஹ்லவன் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதுதொடர்பான வழக்கில் முஹம்மது பஹ்லவன் குற்றவாளி என அமெரிக்காவின் பெடரல் நீதிமன்றம், கடந்த ஜூன் மாதம் தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில் முஹம்மது பஹ்லவனுக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அமெரிக்க பெடரல் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
