பாகிஸ்தானை சீர்குலைக்க தீவிரவாதத்தை ஆயுதமாக இந்தியா பயன்படுத்துகிறது: பாகிஸ்தான் ராணுவ தளபதி சொல்கிறார்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் கைபர் பக்துன்வாவில் உள்ள அபோட்டாபாத்தில் உள்ள பாகிஸ்தான் ராணுவ அகாடமியில் நடைபெற்ற ராணுவ வீரர்களின் பட்டமளிப்பு விழாவில் பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி சையது அசிம் முனீர் நேற்று உரையாற்றினார். அப்போது இந்தியாவுடனான சமீபத்திய ராணுவ மோதலை குறிப்பிட்டு பேசியதாவது: அணுசக்தி மயமாக்கப்பட்ட சூழலில் போருக்கு இடமில்லை என்று இந்தியாவின் ராணுவத் தலைமைக்கு நான் அறிவுறுத்துகிறேன், உறுதியாக எச்சரிக்கிறேன். எங்களை ஒருபோதும் மிரட்ட முடியாது. சொல்லாட்சிகளால் வற்புறுத்தப்பட முடியாது.
பாகிஸ்தானை சீர்குலைக்க தீவிரவாதத்தை ஒரு ஆயுதமாக இந்தியா பயன்படுத்துகிறது. ஒரு சில தீவிரவாதிகளால் பாகிஸ்தானுக்கு தீங்கு விளைவிக்க முடியாது. ஆப்கானிஸ்தான் மண்ணைப் பயன்படுத்தும் அனைத்து தீவிரவாதிகளும் ஒழிக்கப்படுவார்கள். காஷ்மீர் பிரச்னையை சர்வதேச விதிமுறைகளின்படி தீர்க்க வேண்டும். பாகிஸ்தான் அமைதியை விரும்பும் நாடாகும். இவ்வாறு அவர் பேசினார்.