பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: போட்டியில் பங்கேற்க வீரர்கள் அச்சம்: மிரட்டி ஆட வைக்கும் இலங்கை கிரிக்கெட் வாரியம்
ராவல்பிண்டி: பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல் காரணமாக ஒரு நாள் தொடரில் பங்கேற்க இலங்கை கிரிக்கெட் வீரர்கள் அச்சம் தெரிவித்து தாயகம் திரும்ப விருப்பம் தெரிவித்தனர். ஆனால், ‘யாரும் தாயகம் திரும்ப கூடாது, தொடரில் பங்கேற்க வேண்டும், மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று மிரட்டி வீரர்களை இலங்கை கிரிக்கெட் வாரியம் ஆட வைத்து உள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
இலங்கை கிரிக்கெட் அணி, பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில், நேற்று முன்தினம் நடந்த முதல் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. இந்த சூழலில், நேற்று முன்தினம் மாலை பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நீதிமன்றம் வளாகத்தில் தீவிரவாதிகள் காரை வெடிக்க செய்து நடத்திய தற்கொலை படை தாக்குதலில் 12 பேர் பலியானார்கள்.
இதனால் அச்சமடைந்த இலங்கை வீரர்கள் சிலர், பாதுகாப்பு அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு தாயகம் திரும்ப விரும்புவதாக இலங்கை கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்தனர். இதனால் தொடர் நடைபெறுமா? என்ற சந்தேகம் எழுந்தது. இந்நிலையில், பாகிஸ்தானுக்கான இலங்கை தூதர் பிரெட் சென்விரத்னே, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவரும், உள்துறை மந்திரியுமான மொசின் நக்வியை சந்தித்து பாதுகாப்பு பிரச்னை குறித்து ஆலோசித்தார்.
அப்போது அவர், இலங்கை வீரர்களுக்கு அரசு விருந்தினர்கள் போல் உயரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்று உறுதி அளித்தார். பின்னர், போலீஸ் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்ட நக்வி, பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த உத்தரவிட்டார். மேலும், ராணுவம் மற்றும் துணை ராணுவத்தினரையும் பாதுகாப்பு பணிகளை கண்காணிக்க உத்தரவிட்டு இருக்கிறார். தாயகம் திரும்ப விரும்புவதாக சொன்ன இலங்கை வீரர்களையும் நக்வி சந்தித்து, பாதுகாப்பு குறித்து அச்சம் கொள்ள வேண்டாம் என கேட்டு கொண்டார்.
இதையடுத்து இலங்கை கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வீரர்கள் மற்றும் குழு உறுப்பினர்கள் திட்டமிட்டபடி சுற்றுப்பயணத்தைத் தொடர வேண்டும். வாரியத்தின் உத்தரவுகளை மீறி எந்தவொரு வீரரோ அல்லது குழு உறுப்பினர்கள் நாடு திரும்பினால், அவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதுடன், துறை ரீதியலான நடவடிக்கைகளும் எடுக்கப்படும்’ என்று எச்சரித்து உள்ளது.
இதனால் வேறு வழியின்றி இலங்கை வீரர்கள் இந்த தொடரில் விளையாட கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து இலங்கை கிரிக்கெட் வாரியத்துக்கு கண்டனங்கள் தெரிவித்து உள்ளன. இருப்பினும், பாதுகாப்பு காரணங்களால் நேற்று நடைபெற இருந்த 2வது ஒருநாள் போட்டி நாளைக்கும், 15ம் தேதி நடக்க இருந்த 3வது ஒருநாள் போட்டி 16ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளன.
* 8 பேர் பலி : 6 வீரர்கள் காயம் 2009 தாக்குதல் ஞாபகம் இருக்கா?
கடந்த 2009ம் ஆண்டு மார்ச் 3ம் தேதி பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்டின் 3வது நாளில் போட்டியில் விளையாட பாகிஸ்தானின் லாகூரில், மஹேல ஜெயவர்தனே தலைமையிலான இலங்கை கிரிக்கெட் வீரர்கள் பேருந்தில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, பேருந்தை குறிவைத்து தீவிரவாதிகள் நடத்திய கையெறி குண்டுகள் தாக்குதல் மற்றும் துப்பாக்கிச்சூட்டில் 6 போலீஸ் அதிகாரிகள் மற்றும் 2 பொதுமக்கள் பலியாகினர். இந்த தாக்குதலில் 6 இலங்கை வீரர்கள் மற்றும் உதவி பயிற்சியாளர் ஆகியோர் காயமடைந்தனர். அதனைத் தொடர்ந்து கிட்டத்திட்ட 10 ஆண்டுகள் பாகிஸ்தானில் எந்தவொரு சர்வதேச போட்டிகளும் நடத்தப்படாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.
