புளோரிடா: பாகிஸ்தான்-வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி அமெரிக்காவில் லாடர்ஹில் மைதானத்தில் நடைபெற்றது. 3 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றிருந்த நிலையில், வெற்றியாளரை தீர்மானிக்கும் 3வது டி20 போட்டி இன்று அதிகாலை நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் ஃபர்கான் மற்றும் சயிம் அயூப் வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை பதம் பார்த்தனர். ஃபர்கான் 53 பந்துகளில் 74 ரன்களும், அயூப் 49 பந்துகளில் 66 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்க பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்தது.
190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அலிக் அத்னேஸ் சிறப்பான துவக்கம் கொடுத்தார். அவர் 40 பந்துகளில் 60 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஒரு புறம் விக்கெட்டுகள் மள, மளவென சரிய, மறு புறம் பொறுப்புடன் ஆடிய ரூதர்போர்டு 35 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 24 ரன்கள் தேவைப்பட, வெஸ்ட் இண்டீஸ் அணி 11 ரன்கள் மட்டுமே எடுத்து 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.