பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த வழக்கில் பிரபல பெண் யூடியூபருக்கு எதிராக 2,500 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்: அரியானா போலீஸ் அதிரடி
ஹிசார்: பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவ ரகசியங்களை உளவு பார்த்து வழங்கியதாக குற்றம்சாட்டப்பட்ட யூடியூபர் ஜோதி மல்ஹோத்ராவுக்கு எதிராக வலுவான ஆதாரங்களுடன் காவல்துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். அரியானாவில் ‘டிராவல் வித் ஜோ’ என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வந்த ஜோதி மல்ஹோத்ரா, கடந்த ஆண்டு ஏப்ரல் 17ம் தேதி பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்டார். அங்குள்ள பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிகளுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டதாக கூறப்படுகிறது. ஐ.எஸ்.ஐ தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய ஷாகிர், ஹசன் அலி, நசீர் தில்லான் உள்ளிட்ட நபர்களுடன் ஜோதிக்கு தொடர்பு இருந்ததாக தகவல்கள் கிடைத்தன.
குறிப்பாக, டெல்லியின் பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றி வந்த எஹ்சான்-உர்-ரஹீம் என்கிற டேனிஷ் என்பவருடன் ஜோதி தொடர்பில் இருந்து வந்துள்ளார். பாகிஸ்தான் உளவுத்துறை, ஜோதியை தங்களுக்கு உளவு சொல்லும் கருவியாக மாற்றிப் பயன்படுத்தியதாகவும் கூறப்பட்டது. கடந்த ஏப்ரல் 22ம் தேதி நடந்த பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் நடமாட்டங்கள் குறித்த ரகசியத் தகவல்களை பாகிஸ்தானுக்கு டேனிஷ் கசியவிட்டதாக புலனாய்வு அமைப்புகள் குற்றம்சாட்டியது. இதைத்தொடர்ந்து, அவர் விரும்பத்தகாத நபராக அறிவிக்கப்பட்டு, அடுத்த 24 மணி நேரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டார். அதன்படி, மே 13ம் தேதி டேனிஷ் இந்தியாவிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
இந்தச் சூழலில், கடந்த மே 16ம் தேதி ஜோதி கைது செய்யப்பட்டார். அரியானா மாநிலம் ஹிசார் காவல்துறையின் சிறப்பு புலனாய்வுக் குழு, யூடியூபர் ஜோதி மல்ஹோத்ராவுக்கு எதிராக ஹிசார் நீதிமன்றத்தில் 2,500 பக்கங்கள் கொண்ட விரிவான குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளது. பாகிஸ்தானுக்கு அவர் உளவு பார்த்ததற்கான வலுவான ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாக சிறப்பு புலனாய்வுக் குழு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. மேலும், ஜோதியின் கைப்பேசியில் மேற்கொள்ளப்பட்ட எண்ணியல் தடயவியல் ஆய்வில், அவர் பாகிஸ்தான் தூதரக அதிகாரி டேனிஷுடன் நீண்ட உரையாடல்களை நடத்தியிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும் புலனாய்வு துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.