ஜெய்ப்பூர்: பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பை சேர்ந்த அதிகாரி கைது செய்யப்பட்டார். உத்தரகாண்ட் மாநிலம் அல்மோராவை சேர்ந்தவர் மகேந்திர பிரசாத். இவர் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மாரின் சந்தன் பகுதியில் உள்ள இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின்(டிஆர்டிஓ) விருந்தினர் மாளிகை மேலாளராக பொறுப்பு வகித்து வந்தார். ஜெய்சல்மாரின் பொக்ரானில் ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகளின் பயிற்சி மற்றும் சோதனைகளை டிஆர்டிஓ நடத்துகிறது.
இதில் ஈடுபடும் நிபுணர்கள் மற்றும் அதிகாரிகள் டிஆர்டிஓ விருந்தினர் மாளிகையில் தங்கி உள்ளனர். இந்நிலையில் மேலாளர் மகேந்திர பிரசாத், பொக்ரான் தளத்தில் செய்யப்படும் சோதனைகள், விருந்தினர் மாளிகையில் தங்கி உள்ளவர்கள் பற்றிய முக்கிய தகவல்களை பாகிஸ்தானுக்கு தெரிவித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து மகேந்திர பிரசாத்தை ஜெய்சல்மார் காவல்துறையினர் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.