துபாய்:ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் சேர்த்தது. 18 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் குவித்து பாகிஸ்தான் வெற்றி பெற்றது. இதற்கிடையே இந்தியாவுக்கு எதிரான போட்டியின் போது வித்தியாசமான சைகைகள் மூலம் கொண்டாட்டங்களில் ஈடுபட்ட பாகிஸ்தான் வீரர்களுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கு இந்திய வீரர்களும் பதிலடி கொடுத்ததோடு, இந்திய முன்னாள் ஆல்ரவுண்டர் இர்பான் பதான் பாகிஸ்தான் வீரர்களை கடுமையாக சாடினார். இந்நிலையில் தற்போது இலங்கைக்கு எதிரான போட்டியிலும் பாகிஸ்தான் வீரர் அப்ரார் அகமது கேலி செய்யும் வகையில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதும், அதற்கு இலங்கை வீரர் ஹசரங்கா பதிலடி கொடுத்ததும் வைரலாகி வருகிறது.
இலங்கை அணி பேட்டிங்கின் போது 15 ரன்களில் இருந்த ஹசரங்காவை பாகிஸ்தான் ஸ்பின்னர் அப்ரார் அகமது க்ளீன் போல்டு ஆக்கினார். விக்கெட் எடுத்த மகிழ்ச்சியை கொண்டாடுவதற்காக அப்ரார் அகமது சைகை காட்டிய விதம் ஹசரங்காவை கேலி செய்வது போன்று ஸ்லெட்ஜ் செய்யும் விதமாக இருந்தது. இதை தொடர்ந்து பாகிஸ்தான் பேட்டிங் ஆடியது. பாகிஸ்தான் வீரர் ஃபகர் ஜமானை ஒரு கையால் கேட்ச் பிடித்து ஆட்டமிழக்கச் செய்த ஹசரங்கா, பவுலிங்கிலும் ஜாலம் காட்டி சைம் அயூப் மற்றும் கேப்டன் சல்மான் அலி அகா ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்த 3 விக்கெட்களின் போதும் வித்தியாசமான கொண்டாட்டங்களை வெளிப்படுத்திய ஹசரங்கா, ஸ்லெட்ஜ் செய்த அப்ரார் அகமதுவுக்கு பதிலடி கொடுத்தார். இந்த போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்ற போதிலும், போட்டியின் போது ஹசரங்கா கொடுத்த தரமான சம்பவம் அப்ரார் அகமதுவுக்கு தக்க பதிலடி கொடுப்பது போல் இருந்ததாக கிரிக்கெட் ரசிகர்கள் இணையதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். எனினும் போட்டியின் முடிவில் அப்ரார் அகமது மற்றும் ஹஸரங்கா ஒருவரை ஒருவர் கட்டி பிடித்து நட்பு பாராட்டி பேசியது வைரலாகி வருகிறது.