புதுடெல்லி: பாகிஸ்தான், சவுதி அரேபியா இடையே பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதன்படி இனி பாகிஸ்தான் அல்லது சவுதி அரேபியா மீது யாராவது தாக்கினால் இருநாடுகள் மீதான தாக்குதலாக கருத்தில் கொள்ளப்படும். இரு நாடுகளும் இணைந்து பதிலடி கொடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது குறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், ‘‘இந்தியாவின் தேசிய நலன்களை பாதுகாப்பதற்கும் அனைத்து களங்களிலும் விரிவான தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் ஒன்றிய அரசு உறுதி பூண்டுள்ளது. பாகிஸ்தான் -சவுதி அரேபியா இடையிலான ஒப்பந்தத்தால் நமது தேசிய பாதுகாப்பு மற்றும் பிராந்திய மற்றும் உலகளாவிய ஸ்திரதன்மைக்கு ஏற்படும் தாக்கங்கள் குறித்து இந்தியா ஆய்வு செய்யும்” என்றார்.
* தேசிய பாதுகாப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும் - காங்.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், ஆபரேஷன் சிந்தூர் திடீரென நிறுத்தப்பட்ட ஒரு மாதத்திற்கு பின், ஏப்ரல் 2025பஹல்காம் தீவிரவாத தாக்குதல்களுக்கு நேரடியாக வழிவகுத்த அதே நபரான பாகிஸ்தானின் பீல்ட் மார்ஷல் அசீம் முனீரை அமெரிக்க அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் விருந்துக்கு அழைத்தார்.
பிரதமர் மோடியின் சீன வருகைக்கு பின் சீன அதிபர் ஜீ ஜின்பிங், சீனாவின் ரகசிய ராணுவ வளாகத்தை பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரிக்கு திறந்து வைத்தார். இப்போது பஹல்காம் தீவிரவாத தாக்குதல் நடந்தபோது பிரதமர் மோடி இருந்த சவுதி அரேபியா, பாகிஸ்தானுடன் ஒரு பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இது நிச்சயமாக இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கு கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தும் என்று காங்கிரஸ் கவலைப்படுகிறது\” என்று குறிப்பிட்டுள்ளார்.