பாகிஸ்தான் எல்லையை ஒட்டி 10 நாட்கள் இந்தியா போர் பயிற்சி: உள்நாட்டு ஆயுதங்கள் போர்க்கள சூழலில் பரிசோதனை!
குஜராத்: பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதியில் இந்தியா பிரமாண்டமான 10 நாள் போர் பயிற்சியை தொடங்கியுள்ளது. எக்ஸ் திரிசூல் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த போர் ஒத்திகையில் முப்படைகளும் பங்கேற்று தங்களின் தயார் நிலையை உறுதிப்படுத்தி உள்ளது. வெவ்வேறு விதமான நிலப்பகுதிகளில் பலவகையான உத்திகளை பயன்படுத்தி போர் மேற்கொள்வது குறித்து பயிற்சி மேற்கொள்ளப்படும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
மேலும், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஆயுதங்களின் செயல் திறனை போர்க்கள சூழலில் சோதிப்பதாகவும் இப்பயிற்சி இருக்கும் என்று பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது. ஒத்திகை நடக்கும் குஜராத், ராஜஸ்தான் பகுதிகளில் 28,000 அடி உயரத்திற்கு விமானங்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பிரமாண்ட போர் ஒத்திகையை இந்தியா நடத்துவது அண்மை காலங்களில் இதுவே முதன்முறை என்று பாதுகாப்புத்துறை நிபுணர்கள் கூறுகின்றனர். பாகிஸ்தான் மீதான ஆபரேஷன் சிந்தூர் முடிந்துவிடவில்லை என்றும் நிறுத்தி மட்டுமே வைக்கப்பட்டுள்ளது என்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறி வருவது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே இந்தியாவை ஒட்டிய எல்லை பகுதிகளில் விமானங்களை இயக்க பாகிஸ்தான் தற்காலிக தடை விதித்துள்ளது.
