பெஷாவர்: ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகள் மற்றும் வான்வெளியில் பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறி வருவதாக கூறி ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு படைகள் சனியன்று இரவு பாகிஸ்தானின் ராணுவ சோதனை சாவடிகள் மீது அதிரடி தாக்குதல் நடத்தியது. 58 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த திடீர் தாக்குதலை தொடர்ந்து ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இடையேயான வர்த்தக எல்லைகள் ஞாயிறன்று மூடப்பட்டன. ஆனால் பாகிஸ்தான் ராணுவம் 23 வீரர்கள் மட்டுமே கொல்லப்பட்டதாகவும் 200க்கும் மேற்பட்ட தலிபான்கள் மற்றும் அதன் தொடர்புடைய தீவிரவாதிகளை கொன்றதாகவும் தெரிவித்து இருந்தது.
சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் நிதானத்தை கடைப்பிடிக்கும்படி ஆப்கானிஸ்தானை கேட்டுக்கொண்டன. இதனைதொடர்ந்து டுராண்ட் கோடு என்று அழைக்கப்படும் 2611 கி.மீ. நீளமுள்ள எல்லையில் புதிய துப்பாக்கி சண்டை எதுவும் நடக்கிவில்லை. ஆனால் இரண்டாவது நாளாக நேற்றும் இருதரப்பு வர்த்தகத்திற்கான எல்லையானது மூடப்பட்டது. எல்லை எப்போது மீண்டும் திறக்கப்படும் என்பது குறித்து தகவல் தெரியவில்லை. தென்மேற்கு சாமன் எல்லை மூடப்பட்டு இருந்தாலும், ஞாயிறு முதல் அங்கு சிக்கித் தவிக்கும் சுமார் 1500 ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் நடந்தே செல்வதற்கு அதிகாரிகள் அனுமதி அளித்தாக கூறப்படுகின்றது. டோர்காமில் உள்ள முக்கிய வடமேற்கு எல்லையை கடக்கும் பாதையும் அனைத்து வர்த்தகம் மற்றும் பயணத்திற்கான நேற்று மூடப்பட்டு இருந்தது.