புதுடெல்லி: பாகிஸ்தான் உளவு அமைப்பு ஐஎஸ்ஐ தொடர்புடைய ஆயுதக் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் டெல்லியில் பதுங்கி இருப்பதாக குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்படி, போலீசார் நடத்திய சோதனையில் சர்வதேச ஆயுதக் கடத்தல் கும்பலை சேர்ந்த மன்தீப், தல்விந்தர், மோனு மற்றும் ரோஹன் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த கும்பல் சீனா மற்றும் துருக்கியில் தயாரிக்கப்பட்ட உயர் ரக துப்பாக்கிகளை பாகிஸ்தான் வழியாக இந்தியாவிற்கு சப்ளை செய்து வந்தது. பாகிஸ்தானில் இருந்து டிரோன்கள் மூலம் பஞ்சாபிற்குள் ஆயுதங்களை கடத்தி அங்கிருந்து டெல்லிக்கு எடுத்து வந்து ரவுடி கும்பல்களிடம் விற்பனை செய்து வந்தது விசாரணையில் அம்பலம் ஆனது. அவர்களிடம் இருந்து 2 வெளிநாட்டு கைத்துப்பாக்கிகள் மற்றும் 92 தோட்டாக்களை போலீசார் மீட்டனர். ஆயுத கடத்தல் கும்பலின் தலைவன் ஜஸ்பிரீத் என்ற ஜஸ்ஸா அமெரிக்காவில் உள்ளான்.
+
Advertisement


