பாக். போட்டியிடுவதில் சிக்கல்; 128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்: ஆசிய அணியாக இந்தியா மோதும்
லாஸ் ஏஞ்சல்ஸ்: வரும் 2028ல் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் சேர்க்கப்பட உள்ளது. இதில், இந்தியா - பாக். இடையிலான போட்டி நடைபெறுவதற்கான வாய்ப்பு குறைவு என கூறப்படுகிறது. கடந்த 1900ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டிகளின்போது கிரிக்கெட் போட்டிகள் சேர்க்கப்பட்டிருந்தன. அதன் பின் 128 ஆண்டுகளுக்கு பின் வரும் 2028ம் ஆண்டில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கும் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் சேர்க்கப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்த போட்டிகளில் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவுகளில் ஐசிசி டி20யில் டாப் 6 அணிகள் இடம் பெறுவதற்கு பதில் புதிய முறைப்படி, ஒலிம்பிக் கிரிக்கெட் அணிகள் தேர்வு செய்யப்பட உள்ளன. அதன்படி, ஒவ்வொரு கண்டத்திலும் சிறந்த ஒரு அணி தேர்வு செய்யப்பட்டு போட்டி நடத்தப்படும் என கூறப்படுகிறது. புதிய முறைப்படி, ஆசியா, ஆப்ரிக்கா, ஐரோப்பா, ஓசேனியா, அமெரிக்காஸ் ஆகிய கண்டங்களில் தலா ஒரு அணி தேர்வு செய்யப்படும்.
6வது அணி, தகுதிப் போட்டிகள் மூலம் தேர்வு செய்யப்படும். இந்த முறைப்படி, ஆசியாவில் முதலிடம் வகிக்கும் இந்தியா தேர்வு செய்யப்படுவது உறுதியாகி உள்ளது. தவிர, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா ஆகிய அணிகளும் தேர்வாகும் என கூறப்படுகிறது. அமெரிக்காஸில் இருந்து அமெரிக்க டி20 கிரிக்கெட் அணி தேர்வு செய்யப்படும் வாய்ப்புள்ளது.
இவை தவிர, 6வது அணிக்கான போட்டி கடுமையாக உள்ளது. அந்த இடத்துக்கு, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இலங்கை ஆகிய அணிகளுடன் போட்டியிட வேண்டிய நிலைக்கு பாகிஸ்தான் தள்ளப்பட்டுள்ளது. அதனால், ஒலிம்பிக் கிரிக்கெட்டில் இந்தியா- பாக். இடையிலான போட்டி நடப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என தகவல்கள் கூறுகின்றன.

