இஸ்லாமாபாத்: பஹல்காம் தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்தியா,எடுத்தது. இந்த சம்பவத்துக்கு பின் கடந்த ஜூன் மாதம் பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி அசிம் முனீர் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டார். அப்போது அமெரிக்க அதிபர் டிரம்பை சந்தித்து பேசினார். அதிபர் டிரம்ப், அசிம் முனீரை வெள்ளை மாளிகைக்கு வரவழைத்து அவருக்கு விருந்து அளித்தார்.
இந்த நிலையில்,அசிம் முனீர் மீண்டும் அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். இது குறித்து பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கை: அமெரிக்காவுக்கு சென்றுள்ள ராணுவ தளபதி அசிம் முனீர் அங்கு அரசியல் தலைவர்கள், ராணுவ உயர் அதிகாரிகளை சந்தித்து பேசினார்.
டம்பா என்ற இடத்தில் அமெரிக்க ராணுவ மத்திய கட்டளையின் கமாண்டராக இருந்த ஜெனரல் மைக்கேல் குரில்லா ஓய்வு பெற்றார்.அந்த நிகழ்ச்சியில் முனீர் கலந்து கொண்டார். அதை தொடர்ந்து அமெரிக்க ராணுவத்தின் கூட்டு தலைமை தளபதி ஜெனரல் டேன் கெயினை அவர் சந்தித்து பேசினார். சில அரசியல் தலைவர்களையும் அவர் சந்தித்தார் என்று கூறப்பட்டுள்ளது.