காபூல்: பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் பல்வேறு பயங்கரவாத அமைப்புகள், பாதுகாப்பு படையினர் மற்றும் பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த சம்பவங்களில் உயிரிழப்புகளும் அரங்கேறி வருகின்றன. இதனிடையே, ஆப்கானிஸ்தான், இந்தியா போன்ற அண்டை நாடுகளே பயங்கரவாத தாக்குதலுக்கு காரணம் என்று பாகிஸ்தான் குற்றஞ்சாட்டி வருகிறது. குறிப்பாக, ஆப்கானிஸ்தான் எல்லையோர மாகாணத்தில் பாகிஸ்தான் தலிபான்கள் பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்துவதாகவும் இந்த அமைப்பிற்கு ஆப்கானிஸ்தான் ஆதரவு அளிப்பதாகவும் குற்றஞ்சாட்டி வருகிறது.
இதில் ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத முகாம்களை குறிவைப்பதாக கூறி அவ்வப்போது அந்நாட்டின்மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், ஆப்கானிஸ்தான் மீது நேற்று பாகிஸ்தான் வான்வழி தாக்குதல் நடத்தியது. அந்நாட்டின் நங்கர்கர், கோஸ்ட் மாகாணங்கள் மீது நடத்திய வான்வழி தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர். இதற்கு ஆப்கானிஸ்தான் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.