பஹல்காம் தாக்குதல் நடத்தியவர்கள் கிஸ்தானை சேர்ந்தவர்கள் என்பது ஆதாரத்துடன் உறுதி: பாதுகாப்பு நிறுவனங்கள் தகவல்
ஸ்ரீநகர்: பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, கடந்த மாதம் 28ம் தேதி ஆபரேஷன் மகாதேவ் நடவடிக்கையின் கீழ் காஷ்மீரின் ஸ்ரீநகர் புறநகர் பகுதியில் உள்ள டச்சிகாம் காட்டில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சண்டையில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இவர்கள், லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்த முக்கிய தீவிரவாதிகளான சுலைமான் ஷா என்கிற பைசல் ஜாட், ஆப்கானிஸ்தான் என்கிற அபு ஹம்சா, யாசிர் என்கிற ஜிப்ரான் என்பதும், பஹல்காம் தாக்குதலில் நேரடியாக சம்மந்தப்பட்டவர்கள் என்பதும் அடையாளம் காணப்பட்டது. இவர்களிடம் இருந்து கைப்பற்ற ஆவணங்கள், பயோமெட்ரிக் தரவுகள் ஆகியவை 3 பேரும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்பதை உறுதிபடுத்தியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஷா மற்றும் ஹம்சாவின் பைகளில் இருந்து கைப்பற்றப்பட்ட வாக்காளர் அடையாள அட்டை எண்களை ஆய்வு செய்ததில் அவை லாகூர் (என்ஏ-125) மற்றும் குஜ்ரன்வாலா (என்-79) ஆகிய இடங்களில் உள்ள வாக்காளர் பட்டியலுடன் ஒத்துப் போகின்றன. சேதமடைந்த செயற்கைகோள் தொலைபேசியில் இருந்து மீட்கப்பட்ட பயோமெட்ரிக் பதிவுகளை, பாகிஸ்தானின் தேசிய தரவுத்தளம் மற்றும் பதிவு ஆணையத்தின் (என்ஏடிஆர்ஏ) தரவுகளுடன் இணைத்து ஆய்வு செய்ததில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ராவலகோட் அருகே உள்ள கசூர் மாவட்டம் சாங்கா மங்கா மற்றும் கொய்யன் கிராமத்தில் அவர்களின் முகவரிகளை உறுதிப்படுத்துகின்றன. மேலும் பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட சாக்லேட் ரேப்பர், துப்பாக்கி தோட்டாக்கள் ஆகியவையும் கைப்பற்றுள்ளன.
இதுமட்டுமின்றி, செயற்கைகோள் தொலைபேசியில் பதிவாகி உள்ள லாகூர் சாங்கா மங்காவைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பாவின் தெற்கு-காஷ்மீர் செயல்பாட்டுத் தலைவர் சஜித் சைபுல்லா ஜாட்டின் குரல் மாதிரிகள் அவரது முந்தைய இடைமறிக்கப்பட்ட அழைப்புகளுடன் ஒத்துப்போகின்றன. இதன் மூலம் பஹல்காமில் தாக்குதல் நடத்தியவர்களின் தேசியத்தை சந்தேகத்திற்கு இடமின்றி உறுதிபடுத்தும் ஆவணங்கள் தங்களிடம் இருப்பதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.