பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய சுட்டுக் கொல்லப்பட்ட 3 தீவிரவாதிகளின் சதி அம்பலம்: பாக். வாக்காளர் அட்டை, சாக்லேட் ஆதாரங்கள் வெளியீடு
டெல்லி: பஹல்காமில் சுற்றுலாப் பயணிகளை கொன்ற பாகிஸ்தானிய தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆதாரங்கள் மூலம் அவர்களது பாகிஸ்தான் தொடர்பு நிரூபிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 22ம் தேதி பஹல்காமில் இயற்கை அழகை ரசித்துக்கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த கொடூரத் தாக்குதல் தொடர்பான விசாரணையில், தாக்குதல் நடந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்ட 7.62 அண்ட் 39 மி.மீ. ரக துப்பாக்கி குண்டு உறைகளின் தடயங்கள், கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட மூன்று ஏ.கே-103 ரக துப்பாக்கிகளுடன் பொருந்தியது.
மேலும், பஹல்காமில் கிடைத்த கிழிந்த சட்டை ஒன்றில் இருந்த ரத்தத்தின் மரபணு மாதிரிகள், தச்சிகாமில் கொல்லப்பட்ட மூன்று தீவிரவாதிகளின் மரபணுவுடன் முழுமையாக ஒத்துப் போயுள்ளது. உளவுத்துறையின் தகவல்படி, இந்த மூவரும் கடந்த 2022ம் ஆண்டு மே மாதம் குரேஸ் பகுதி வழியாக எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைக் கடந்து ஊடுருவியுள்ளனர். இவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து உணவு வழங்கியதாக உள்ளூர்வாசிகள் இருவர் ஒப்புக்கொண்டுள்ளனர். தீவிரவாதிகளின் தலைவனான சுலைமான் ஷாவின் கைக்கடிகாரத்தில் இருந்து மீட்கப்பட்ட இருப்பிடக் குறிப்புகள், தாக்குதல் நடந்த இடத்துடன் சரியாகப் பொருந்திப் போனது.
இந்த தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட சுலைமான் ஷா, அபு ஹம்சா, யாசிர் என்கிற ஜிப்ரான் ஆகிய மூன்று லஷ்கர் தீவிரவாதிகளும், சுமார் மூன்று மாதங்களுக்குப் பிறகு கடந்த ஜூலை 28ம் தேதி ‘மகாதேவ் ஆபரேஷன்’ என்ற பெயரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையின் போது சுட்டுக்கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட சுலைமான் ஷா மற்றும் அபு ஹம்சா ஆகியோரின் உடல்களில் இருந்து, பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட இரண்டு வாக்காளர் அடையாள அட்டைகள் கைப்பற்றப்பட்டன. அவற்றின் வரிசை எண்கள் லாகூர் மற்றும் குஜ்ரன்வாலா நாடாளுமன்றத் தொகுதிகளின் வாக்காளர் பட்டியல்களில் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
மேலும், சேதமடைந்த செயற்கைக்கோள் தொலைபேசியில் இருந்து மீட்கப்பட்ட ஒரு நுண் நினைவக அட்டையில், பாகிஸ்தானின் தேசிய குடிமக்கள் பதிவேடான நாட்ராவின் தரவுகள் இருந்தன. அதில் மூவரின் கைரேகைகள், முக அமைப்பு மற்றும் குடும்ப வரைபடம் உள்ளிட்ட உயிரியளவியல் பதிவுகள் இருந்ததால், அவர்கள் பாகிஸ்தான் குடிமக்கள் என்பது உறுதியானது. கராச்சியில் தயாரிக்கப்படும் ‘கேண்டிலேண்ட்’ மற்றும் ‘சோக்கோமேக்ஸ்’ சாக்லேட் உறைகளும் அவர்களது உடமைகளில் இருந்து கண்டெடுக்கப்பட்டது அவர்களின் பாகிஸ்தானிய தொடர்பை மேலும் வலுப்படுத்தியுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் கூறின.