Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பஹல்காம் தாக்குதல் பதிலடிக்கு இந்தியாவுக்கு துணை நிற்போம்: பிரிக்ஸ் நாடுகள் கூட்டறிக்கை

மாஸ்கோ: ரஷ்யாவில் நடந்த பிரிக்ஸ் நாடுகளின் கூட்டத்தில் பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும், இவ்விசயத்தில் இந்தியாவுக்கு துணை நிற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளை முக்கிய உறுப்பினர்களாகக் கொண்டு ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பு இயங்கி வருகிறது. உலகப் பொருளாதாரம் மற்றும் அரசியல் களத்தில் செல்வாக்கு செலுத்தும் இந்த அமைப்பானது, சமீபத்தில் எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய புதிய நாடுகளை இணைத்துக்கொண்டு, 10 உறுப்பு நாடுகளாக விரிவடைந்துள்ளது.

இந்த கூட்டமைப்பின் முக்கிய நோக்கங்களில் ஒன்று, உலக அமைதி மற்றும் பாதுகாப்பை நிலைநிறுத்துவதாகும். அந்த வகையில், தொடக்கம் முதலே சர்வதேச பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்களையும் வன்மையாக எதிர்ப்பதிலும், பயங்கரவாதத்திற்கு எதிராக நிலைபாடு என்ற உறுதியான கொள்கையைக் கடைப்பிடிப்பதிலும் இந்த நாடுகள் ஒருமித்த நிலைப்பாட்டைக் கொண்டுள்ளன. சமீபத்தில், ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய கோழைத்தனமான தாக்குதலுக்கு, பிரிக்ஸ் நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன.

ரஷ்யாவின் நிஸ்னி நோவ்கோரோட் நகரில் நடைபெற்ற பிரிக்ஸ் நாடுகளின் கூட்டறிக்கையில், பயங்கரவாதத்தை எந்தக் காரணத்திற்காகவும் நியாயப்படுத்த முடியாது என்று தெரிவித்த 10 உறுப்பு நாடுகளும், பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுடன் துணை நிற்பதாக உறுதி அளித்தன. மேலும், பயங்கரவாதத்திற்கு நிதியுதவி கிடைப்பதைத் தடுப்பது, உளவுத் தகவல்களைப் பரிமாறிக்கொள்வது, நவீன தொழில்நுட்பங்களைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பது உள்ளிட்டவற்றில் ஒன்றிணைந்து செயல்படவும் தீர்மானம் ஏற்றன. பஹல்காம் தாக்குதலைக் குறிப்பிட்டு கண்டனம் தெரிவித்ததன் மூலம், பயங்கரவாதத்திற்கு எதிரான தங்களின் கொள்கையை பிரிக்ஸ் நாடுகள் மீண்டும் வலுவாக உறுதிப்படுத்தியுள்ளன.