பத்மநாபசுவாமி கோயில் 13 பவுன் தங்கம் மாயம் 6 கோயில் ஊழியர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை: கேரள உயர் நீதிமன்றம் அனுமதி
திருவனந்தபுரம்: பிரசித்தி பெற்ற திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் வாசலில் தங்கமுலாம் பூசும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளுக்காக பயன்படுத்தப்படும் தங்கம் கோயிலில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் கணக்குகளை சரிபார்த்தபோது 13 பவுனுக்கு மேல் எடையுள்ள ஒரு தங்கக்கம்பி மாயமானது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து பத்மநாபசுவாமி கோயில் மேலாளர் திருவனந்தபுரம் போர்ட் போலீசில் புகார் செய்தார். தங்கமுலாம் பூசும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் காணாமல் போன தங்கக்கம்பி கோயில் வளாகத்திலுள்ள மணலில் புதைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் அதைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
இதில் போலீசிடம் சிக்கி விடுவோமோ என பயந்து திருடிய நபர் தான் அந்த தங்கக் கம்பியை மணலில் வீசியிருக்கலாம் என்று தெரியவந்தது. ஆனாலும் திருடிய நபரை கண்டுபிடிக்க போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். சந்தேகப் பட்டியலில் இருந்த 6 ஊழியர்களிடம் பல கட்டங்களிலாக விசாரணை நடத்தியும் எந்த பலனும் ஏற்படவில்லை. இதைத்தொடர்ந்து அவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த போலீசார் தீர்மானித்தனர். இது தொடர்பாக அனுமதி கோரி போர்ட் போலீசார் கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தனர். இதை விசாரித்த உயர்நீதிமன்றம், 6 ஊழியர்களிடமும் உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.

