திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் பிரசித்தி பெற்ற பத்மநாபசுவாமி கோயிலில் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய கமாண்டோ போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 8 மணி நேரத்திற்கு ஒருமுறை கமாண்டோ வீரர்கள் பணி மாறுவார்கள். நேற்று முன்தினம் இரவு பணி முடிந்த சில கமாண்டோ வீரர்கள் நேற்று காலை பாதுகாப்பு அறையில் துப்பாக்கிகளை வைப்பதற்காக சென்றனர்.
அப்போது ஒருவர் தன்னுடைய துப்பாக்கியை சுத்தம் செய்தார். இந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக அவரது கையில் இருந்த துப்பாக்கி தவறுதலாக வெடித்தது. அதிர்ஷ்டவசமாக அவர் துப்பாக்கியை தரையை நோக்கி பிடித்திருந்ததால் குண்டு தரையில் பட்டு சிதறியது. இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.