Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

நெல் கொள்முதலில் ஈரப்பதம் தளர்வு கோரிக்கை நிராகரிப்பு உழவர்களிடையே பிரதமர் உரையாற்றிய ஈரம் காய்வதற்குள் அடுத்த துரோகம்: ஒன்றிய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

சென்னை: உழவர்களிடையே பிரதமர் உரையாற்றிய ஈரம் காய்வதற்குள் அடுத்த துரோகத்தை ஒன்றிய அரசு செய்துள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயர்த்த வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு 2 நாட்களுக்கு முன்பு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். இதையடுத்து, நெல்லின் ஈரப்பதத்தை உயர்த்துவது தொடர்பாக ஒன்றிய அரசின் 3 குழுக்கள் தமிழ்நாட்டில் அக்டோபர் மாதம் களப்பயணம் மேற்கொண்டு மாதிரிகளை சேகரித்த நிலையில், இன்றளவும் உத்தரவுகள் ஏதும் கிடைக்கவில்லை என்றும் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். செறிவூட்டப்பட்ட அரிசி மணிகளின் மாதிரி எடுக்கும் அதிகாரத்தை தென்னிந்திய மாநிலங்களில் உள்ள இந்திய உணவுக் கழக அதிகாரிகளுக்கு வழங்கி, தென்னிந்திய மாநிலங்களில் உள்ள ஆய்வகங்களில் சோதனை நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் தனது கடிதத்தில் முதலமைச்சர் கோரிக்கை வைத்தார். இந்நிலையில்,நெல் கொள்முதலில் ஈரப்பதம் தளர்வு தொடர்பான தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஒன்றிய அரசு நிராகரித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு: உழவர்களிடையே பிரதமர் உரையாற்றிய ஈரம் காய்வதற்குள் அடுத்த துரோகம்! கோவைக்கான மெட்ரோ ரயில் திட்டத்தை நிராகரித்துவிட்டு, அதே கோவைக்கு எந்தவிதமான உறுத்தலும் இன்றி பிரதமர் வந்து சென்ற ஈரம்கூட இன்னும் காயவில்லை; அதற்குள் நெல் கொள்முதலில் ஈரப்பதம் தளர்வு தொடர்பான நமது கோரிக்கையை நிராகரித்துள்ளது ஒன்றிய பாஜ அரசு. கனமழை காரணமாக ஈரப்பதம் அதிகமாகியுள்ள நெல்லினைக் கொள்முதல் செய்ய வேண்டும் என்ற தமிழ்நாட்டின் குரல் ஏன் பிரதமரின் காதுகளுக்குக் கேட்கவில்லை? விவசாயிகளின் அழுகுரல் ஏன் கேட்கவில்லை? கடந்த ஆண்டுகளில், தமிழ்நாடு அரசின் கோரிக்கைகளின் அடிப்படையில், இத்தகைய ஈரப்பத அளவிற்கான தளர்வைப் பலமுறை வழங்கிய ஒன்றிய அரசு தற்போது வழங்க மறுப்பது ஏன்? இவ்வாறு பதிவிட்டுள்ளார்.