Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இந்தாண்டு குறுவைப் பருவத்தில் 11.21 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது: அமைச்சர் சக்கரபாணி அறிக்கை

சென்னை: இந்தாண்டு குறுவைப் பருவத்தில் 11.21 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. நெல் கொள்முதல் மற்றும் நகர்வுப் பணிகள் துரிதமாக நடைபெற்று 1.4 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.2,709 கோடி பணம் வழங்கப்பட்டுள்ளது என உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். நாளொன்றுக்கு 30,000 மெட்ரிக் டனுக்கு மேல் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருவதை அறியாமல், சிலர் தேவையற்ற குறைகளை கூறி வருகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;

* வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கை!

* உரிய காலத்தில் காவிரி நீர் திறப்பு!

* இரண்டரை இலட்சம் விவசாயிகளுக்குப் புதிய இலவச பம்ப்செட் இணைப்புகள்!

* தமிழ்நாடு அரசின் ஊக்கத் தொகையுடன் நெல் குவிண்டால் ஒன்றுக்கு சன்னரகத்திற்கு ரூ. 2545/- பொதுரகத்திற்கு ரூ.2500.

* வரலாறு கண்டிராத குறுவை சாகுபடி 6.13 இலட்சம் ஏக்கர்

* நெல் கொள்முதல் பருவம் அக்டோபர் முதல் நாளுக்குப் பதிலாக செப்டம்பர் முதல் நாளிலிருந்து நெல் கொள்முதல் செய்ய மாண்புமிகு பிரதமர் அவர்களிடம் கடிதம் எழுதி ஒன்றிய அரசிடம் ஒப்புதல் பெற்று கடந்த நான்காண்டுகளாக நெல்லைப் பெருமளவில் மழையிலிருந்து காத்தது நம்முடைய முதல்வர் அவர்கள்!

* 576.2 கோடி ரூபாயில் வேளாண் இயந்திரங்கள்!

* வேளாண் வளர்ச்சி 5.66% !

* நெல் சேமித்திட 4.03 இலட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவில் மேற்கூரையிட்ட சேமிப்புத் தளங்கள் புதிதாகக் கட்டப்பட்டுப் பயன்பாட்டில் உள்ளன!

* 3.40 இலட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவில் புதிய மேற்கூரையிட்ட சேமிப்புத் தளங்கள் கட்டப்பட உள்ளன!

* 2011 2021 வரை 10 ஆண்டு கால அ.தி.மு.க ஆட்சியில் நெல் கொள்முதல் செய்யப்பட்டதை விட 54 மாதங்களில் தி.மு.க ஆட்சியில் 16 இலட்சம் டன் நெல் அதிக கொள்முதல் செய்யப்பட்டது!

* ஈரப்பதத்தை உயர்த்திட ஒன்றிய அரசு குழுக்கள் ஆய்வு செய்து வருகின்றன!

* 24.10.2025 ஒரே நாளில் இரயில்கள் மூலம் 21000 மெட்ரிக் டன் நெல் நகர்வு செய்யப்பட்டது வரலாற்றுச் சாதனையாகும்!

* கடந்த ஆண்டைக் காட்டிலும் இரண்டே கால் மடங்கு அதிகம் இரயில்கள் மூலம் நகர்வு!

அனைத்து வகைகளிலும் வேளாண் பெருங்குடி மக்களுக்குப் பணியாற்றி குறிப்பாக மண்ணின் மைந்தர் என்ற வகையில் டெல்டா விவாசயிகளுக்கு அரும்பணியாற்றி வரும் நம் முதல்வரை முதல்வர்களுக்கெல்லாம் முதல்வர் என இந்தியத் திருநாடே பாரட்டி வருகிறது.

2020-2021 குறுவைப் பருவம் முழுமைக்கும் சேர்ந்தே 5.74 இலட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால் நம் தலைவரின் ஆட்சியில் 2025 2026 குறுவைப் பருவத்தில் 58 நாட்களில் மட்டும் 11.21 இலட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

வேளாண் துறையின் மதிப்பீட்டின்படி செப்டம்பர் மற்றும் அக்டோபரில் 11.07 இலட்சம் டன் நெல் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 28.10.2025 பிற்பகல் வரை 11.21 இலட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதற்காக 1872 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

நாளொன்றுக்கு 30 ஆயிரம் மெட்ரிக் டன்னுக்கு மேல் நெல் கொள்முதல் செய்வதையும் டெல்டா மாவட்டங்களிலிருந்து இரயில் வேகன்கள் மற்றும் லாரிகள் மூலமாக அதை மற்ற மாவட்டங்களுக்கு நகர்வு செய்யப்பட்டு வருவதையும் அறிந்து கொள்ளாமல் சில அரசியல் கட்சித் தலைவர்களும், நிலைமையின் உண்மைத் தன்மையைப் புரிந்து கொள்ளாத சிலரும் தேவையின்றிக் குறை கூறி வருகின்றனர்.

நெல் கொள்முதலில் சிரத்தையுடன் செய்யும் கழக அரசு பணிகள் பற்றி நெல் விவசாயிகளுக்கு, குறிப்பாக டெல்டா விவசாயிகளுக்கு நன்கு தெரியும். ஆதலால் தேவையற்ற குறைகளைக் கூறாமல் ஆக்கபூர்வமான ஆலோசனைகளை வழங்கினால் சிறப்பாக இருக்கும்.

போற்றுபவர் போற்றட்டும்; புழுதுவாரித் தூற்றுபவர் தூற்றட்டும்; என் கடன் பணி செய்வதே" என்ற உணர்வோடு முதலமைச்சர் தலைமையில் நெல் கொள்முதல் உள்ளிட்ட பணிகளைத் தொய்வின்றிச் செய்வோம்!" என தெரிவித்துள்ளார்.