Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

நெல் கொள்முதலில் தற்போது எதிர்க்கட்சிகள் அரசியல் செய்து வருகின்றன: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு

சென்னை: நெல் கொள்முதலில் தற்போது எதிர்க்கட்சிகள் அரசியல் செய்து வருகின்றன என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு வைத்துள்ளார். விவசாயிகளுக்கு ரூ.214 கோடியில் குறுவை தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. மழை பெய்வது இயற்கையாக நிகழ்வது ஒன்று; நெல் விளைந்த பிறகே அறுவடை செய்ய முடியும். நெல்லுக்கு அதிக விலை தரப்படுவதால் கடந்த ஆண்டைவிட 3 மடங்கு நெல் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

மேலும் அவர் அளித்த பேட்டியில்; "எதிர்க் கட்சியில் உள்ளவர்கள் தவறாக நெல் அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். டெல்டா பகுதிகளில் திடீரென்று வடகிழக்கு பருவமழை ஆரம்பித்த மறுநாளே தீவிரமான மழை பெய்தது. குறுவை நெல்லை பொறுத்தவரையில், குறுகிய கால பயிராக விவசாயிகள் நடவு செய்வார்கள். அறுவடைக்கு முன்பாகவே, மழை வந்தால் உடனே அறுவடை செய்ய முடியாது. முதிர்ச்சி அடைந்த பிறகு தான் கதிரை அறுவடை செய்ய முடியும்.

பிஜேபி-யின் முன்னாள் தலைவர் காவல் துறையைச் சார்ந்தவர். விவசாயத்தைப் பற்றி தெரியாது. நேற்றைக்கு அவர் ஒரு அறிக்கையை விடுத்திருக்கிறார். மழை வருவதற்கு முன்பே அறுவடை செய்திருக்கலாமே என்று அவர் கூறியிருக்கிறார். மழை பெய்வது என்பது இயற்கை. அது எப்போது வரும் என்பது யாருக்கும் தெரியாது. முன்பெல்லாம், வடகிழக்கு பருவமழை தொடங்கி 10 நாட்களுக்குப் பிறகு தான் தீவிரமான மழை தொடங்கும். தற்போது காலமாற்ற சூழ்நிலை ஏற்பட்ட காரணத்தால், மழை திடீர், திடீரென்று பெய்கிறது.

விவசாயிகள், மழை, வெயில், வறட்சி ஆகிய இவைகளை எல்லாம் சமாளித்து நடைபெறக்கூடியது தான் விவசாயம். அந்த வகையில், குறுவை விவசாயத்தைப் பொறுத்தவரை, கடந்த ஆண்டை விட இந்த அரசின் முன்னெடுப்பு காரணமாக குறுவை தொகுப்பை -முதலமைச்சர் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, ஆண்டுதோறும் குறுவை தொகுப்பை அறிவித்திருந்தார்.

இந்த ஆண்டு குறுவை தொகுப்பு கிட்டத்தட்ட 214 கோடி ரூபாய் அளவிற்கு டெல்டா பகுதிகளிலும், டெல்டா இல்லாத மற்ற பகுதிகளிலும் கூடுதலாக அறிவித்திருக்கிறார். மெஷின் மூலமாக நடுவதற்கு நான்காயிரம் ரூபாயும், இடுபொருள் இலவசமாகவும், மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கின்ற காரணத்தாலும், அதிகமான விவசாயிகள் இதனால் பயனடைந்து வருகின்றனர்.

அதேபோல, நெல்லின் விலை கிட்டத்தட்ட குவிண்டால் இரண்டாயிரத்து 500 ரூபாய் அளவிற்கு உயர்த்தி வழங்கப்பட்ட காரணத்தாலும், விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்பட்ட காரணத்தாலும், மூன்று மடங்கு நெல்லை உற்பத்தி செய்திருக்கிறார்கள். கடந்த 10 ஆண்டு ஆட்சி காலங்களில், ஒரு கோடியே 19 இலட்சத்து 81 ஆயிரத்து 352 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால், தற்போது 53 மாதங்களில் 1 கோடியே 93 இலட்சத்து 28 ஆயிரத்து 309 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது.

அதேபோல, கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில், 7 இலட்சத்து 27 ஆயிரத்து 650 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட நெல் சேமிக்கின்ற கிடங்குகள் கட்டப்பட்டிருந்தது. ஆனால் நம்முடைய -முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்ற இந்த நான்கு ஆண்டு காலத்தில், 4 இலட்சத்து 3 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட புதிதாக கட்டி முடிக்கப்பட்ட நெல் சேமிக்கின்ற கிடங்குகள் தற்போது பயன்பாட்டில் இருக்கின்றது. இந்த ஆண்டு கூடுதலாக 3 இலட்சத்து 30 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் சேமிக்கின்ற கிடங்குகள் கட்டி முடிக்கப்படும் நிலையில் இருக்கின்றது.

மொத்தம் இந்த ஆட்சியில் 7 இலட்சத்து 33 ஆயிரத்து 350 மெட்ரிக் டன் நெல் கொள்ளளவு கொண்ட கிடங்குகள் கட்டப்பட்டிருக்கிறது. பத்தாண்டு கால ஆட்சியில் சேமிப்பு கிடங்குகள் கட்டி முடிக்கப்பட்டது 7 இலட்சம். ஆனால் இந்த நான்காண்டு காலத்தில் சேமிப்பு கிடங்குகள் கட்டி முடிக்கப்பட்டது 7 இலட்சம் மற்றும் பிற. இவை தவிர, ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்களின் மூலமாக 1 இலட்சத்து 63 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சேமிக்கக்கூடிய கிடங்குகளில் நெற்பயிர்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு வருகிறது.

குறுவை நெல்லை பொறுத்தவரையில், கடந்த காலங்களில் விவசாயிகள் நெல் உற்பத்தி செய்யும் காலங்களில் அறுவடை செய்யமாட்டார்கள். அவர்கள் காலத்தே அறுவடை செய்யவேண்டும். அறுவடை செய்வதற்கு களங்கள் இருக்கவேண்டும். நல்ல சாலைகள் இருக்கவேண்டும். இவை போன்ற நிலைகள் இல்லாத காரணத்தில் குறுவை நெல் அவ்வளவாக செய்யவில்லை. மேலும், 14 இலட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி செய்து, அறுவடை செய்து, அதை வயலில் இருந்து விவசாயிகள் சாலைக்கு கொண்டு வரவேண்டும்; இல்லையென்றால், நெல்லை களத்திற்கு கொண்டு வரவேண்டும் இதுதான் நடைமுறை. தற்போது விவசாயிகள் இயந்திரம் மூலமாக நடவு செய்து அறுவடை செய்கிறார்கள். முன்பு விவசாயிகள் கையால் அறுவடை செய்தார்கள். தற்போது இயந்திரத்தின் மூலமாக அறுவடை செய்கிறார்கள். விவசாயிகளுக்கு குறுவை தொகுப்பு கூடுதலாக வழங்கும்போது இதுபோன்ற நெல்லை உடனடியாக அப்புறப்படுத்துவதற்கு நடவடிக்கை தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது.

ஒன்றிய அரசு ஒரு திட்டத்தின் மூலம் நெல்லை அறுவடை செய்யும்போது ஒரு மூட்டைக்கு ஒரு கிலோ என்ற அளவிற்கு அரிசியில் கலக்க வேண்டும். மக்கள் சாப்பிடுகின்ற உணவில் அனைவருக்கும் இரும்பு சத்து கிடைக்கக்கூடிய அளவிற்கு இருக்கவேண்டும் என்ற காரணத்தினால், ஒன்றிய அரசு ஒரு திட்டமாக இதனை கொண்டு வந்திருக்கிறது. ஆனால், இதற்கு சரியாக அனுமதி வழங்கவில்லை. அதனால், விவசாயிகள் உற்பத்தி செய்த நெல்லை அந்தந்த பகுதிகளுக்கு கிட்டத்தட்ட 70 மில்களுக்கு கொண்டு செல்லப்பட்ட நெல் தேக்கமாக இருக்கின்றது. மேலும், ஈரப்பதமான நெல்லை ஒன்றிய அரசின் குழுவினாரால் ஆய்வு செய்யப்பட்டது. இதற்கு மானியம் வழங்க இயலாது என்று நிராகரித்து விட்டார்கள். இதனை எல்லாம் பார்த்துவிட்டு பாரதப் பிரதமர் அவர்கள் கோயம்புத்தூரில் இயற்கை விவசாய மாநாடு நடத்தி இருக்கிறார்கள்.

ஆனால், இயற்கை விவசாயம் செய்யாதவர்கள் அதனை நடத்தி இருந்தார்கள். அப்போது நடத்திய இயற்கை விவசாயி ராமசாமி அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார்கள். எதிர்ப்பு தெரிவித்து, இயற்கை விவசாயம் செய்யாதவர்கள் இயற்கை விவசாயம் என்ற போர்வையில் மாநாடு நடத்தியிருந்தார்கள். ஈரப்பதமான நெல்லிற்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. அதனை மறுத்துவிட்டு, இங்கே விவசாய மாநாடு நடத்தியிருக்கிறார்கள்.

எதிர்க்கட்சித் தலைவர் - எடப்பாடி ஏன் நெல்லை அறுவடை செய்யவில்லை என்று கேட்கிறார்? பயிர் முதிர்ச்சி அடைந்த பிறகு தான் விவசாயிகள் அறுவடை செய்யமுடியும். இதற்கு ஏன் மழை வருவதற்கு முன்பே நீங்கள் அறுவடை செய்திருக்கலாமே என்று அண்ணாமலை அவர்கள் கேள்வி கேட்கிறார். பச்சையான பூவும், காயுமாக இருக்கின்ற நெல்லை எப்படி அறுவடை செய்ய முடியும்? என்று இவைகள் எல்லாம் தெரியாமல் இந்த அரசின் மீது தூற்றவேண்டும் என்ற நோக்கத்தில் அவர்கள் கருத்துக்களை வழங்கியிருக்கிறார்கள். இந்த அரசாங்கம் பொறுப்பேற்ற பிறகு, நெல்லின் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. குறுவை தொகுப்பு மூலமாக விவசாயிகளுக்கு உதவி செய்யப்பட்டிருக்கிறது.

அதேபோல கடந்த நான்கரை ஆண்டுகளில், பயிர் காப்பீட்டைப் பொறுத்தவரையில், 5 ஆயிரத்து 997 கோடி காப்பீட்டுத் தொகை விடுவிக்கப்பட்டிருக்கிறது. இந்த காப்பீட்டுத் தொகையின் மூலமாக 37 இலட்சம் விவசாயிகள் பயனடைந்திருக்கிறார்கள். அதே போன்று மழை, வறட்சி போன்ற இயற்கை இடர்பாடுகள் காரணத்தால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய விவசாயிகளுக்கு பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ஆயிரத்து 692 கோடி ரூபாய் விவசாயிகளுக்கு விடுவிக்கப்பட்டு இழப்பீட்டுத் தொகையாக வழங்கப்பட்டிருக்கிறது. இதனால், கிட்டத்தட்ட 20 இலட்சத்து 84 ஆயிரம் விவசாயிகள் பயனடைந்து இருக்கிறார்கள் என்று இதன் மூலம் இந்த செய்தியை உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். - எடப்பாடி பழனிசாமிக்கு தினந்தோறும் ஏதாவது செய்தி ஊடகத்தில் வரவேண்டும் என்பதற்காக இதனை செய்து கொண்டிருக்கிறார். ஆக்கபூர்வமான வேலைகள் இன்னும் செய்யவில்லை.

தற்போது நம்முடைய அரசாங்கம் காவிரி டெல்டா பகுதிகளில் அறுவடை செய்யப்பட்ட நெல் அனைத்தும் பாதுகாப்பான இடங்களில் வைக்கப்பட்டிருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்" என பேட்டியளித்தார்.