கொலை முயற்சியில் ஈடுபட்டதால் நெல்லை ரயில் நிலையம் முன்பு தொழிலாளி வெட்டிக்கொலை: பிளஸ் 1 மாணவர்கள் கைது
நெல்லை: நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் முன்பு டீ குடிக்க வந்த தொழிலாளி முன்விரோதம் காரணமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக பிளஸ் 1 படிக்கும் இரு மாணவர்களை போலீசார் கைது செய்தனர். நெல்லை டவுன் சுந்தரர் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் (19). தண்ணீர் கேன் விநியோகம் செய்யும் தொழிலாளி. இவரது தாய், தந்தை இறந்து விட்டனர். இதன் காரணமாக பெரியப்பா வீட்டில் தங்கி வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு வெங்கடேசன், நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் அருகில் உள்ள டீக்கடைக்கு டீ குடிக்க நண்பர்களுடன் பைக்கில் வந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து பைக்கில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் வெங்கடேசனை சுற்றிவளைத்து அரிவாளால் வெட்டியது. இதில் சம்பவ இடத்திலேயே வெங்கடேசன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். பின்னர் அந்த கும்பல் பைக்கில் தப்பிச் சென்றது.
தகவலறிந்த சந்திப்பு போலீசார் வெங்கடேசன் உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி நெல்லை டவுனில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் இரு மாணவர்களை கைது செய்தனர். முதல்கட்ட விசாரணையில், கடந்த 8 மாதங்களுக்கு முன்பு டவுனை சேர்ந்த சக்தி என்பவருக்கும் வெங்கடேசனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து சக்தியின் கைகளை வெங்கடேசன் வெட்டி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதனால் அவர்களுக்குள் முன்விரோதம் இருந்து வந்தது. மேலும் இதேபகுதியில் பைக்கில் வேகமாக சென்றது குறித்தும் இவர்களுக்குள் மோதல் ஏற்பட்டதன் காரணமாக நேற்று முன்தினம் நள்ளிரவு சந்திப்பு ரயில் நிலையம் பகுதியில் டீ குடிக்க வந்த வெங்கடேசனை 3 பேர் அரிவாளால் வெட்டிக்கொன்றது தெரியவந்தது.
கைதான 2 மாணவர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சந்திப்பு ரயில் நிலையம் பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தப்பி ஓடிய இசக்கிராஜா (19) என்பவரை போலீசார் தேடிவருகின்றனர். அவர் பிளஸ் 2 முடித்துவிட்டு போட்டி தேர்வு எழுதுவதற்காக தனியார் இன்ஸ்டிடியூட்டில் படித்து வருகிறார். இக்கொலை சம்பவத்தால் நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.