நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் கமிஷன் கேட்பவர்கள் மீது நடவடிக்கை: தமிழக அரசுக்கு பாஜ கோரிக்கை
சென்னை: தமிழக பாஜ மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகம் முழுக்க நெல் கொள்முதல் நிலையங்களில், விவசாயிகளிடம் இருந்து மூட்டை ஒன்றுக்கு ரூ.40 முதல் 60 வரை கமிஷன் கேட்டு மிரட்டுபவர்கள் மீதும் குண்டர் தடுப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒரு விசாரணை கமிஷன் அமைத்து நெல் கொள்முதல் நிலையங்களில் பல ஆண்டுகளாக நடந்து வரும் இச்சம்பவம் குறித்து முழுமையாக விசாரணை நடத்தி அறிக்கை பெற்று, இனி எதிர்காலத்தில் நெல் கொள்முதல் நிலையங்களில் உள்ள குளறுபடிகளை ஆராய்ந்து ஒட்டுமொத்தமாக களைவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், நெல் கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் டெல்டா மாவட்டங்கள் மற்றும் தமிழகத்தில் நெல் கொள்முதல் செய்யப்படும் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட அளவில் காவல்துறை சிறப்பு புலனாய்வு குழு அமைத்து நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளை மிரட்டுபவர்கள் மேல் வழக்கு பதிவு செய்து, கைது செய்து உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.