நெல் கொள்முதலில் அடிப்படை தெரியாமல் தவறான தகவலை பரப்புகிறார் பொய்யும், துரோகமும்தான் எடப்பாடியின் வரலாறு: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
தென்காசி: நெல் கொள்முதலில் அடிப்படை தெரியாமல் பொய்யான தகவலை பரப்புகிறார். பொய்யும், துரோகமும்தான் எடப்பாடியின் வரலாறு என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தென்காசியில் நடந்த அரசு விழாவில் ரூ.1020 கோடி மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளை துவக்கி வைத்து, ஏழை, எளிய மக்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
எப்போதும் மக்களையே நினைத்துக் கொண்டு நாங்கள் இயங்குவதால் மக்களாகிய நீங்களும் எங்களுடன் இருக்கிறீர்கள். நமக்கிடையே ஏற்பட்டிருக்கும் இந்த நெருக்கம் சிலரை தூங்கவிடாமல் செய்கிறது. அதனால்தான், நாள்தோறும் ஏதாவது ஒரு அவதூறு செய்தியை அடித்து விடுகிறார்கள். குறிப்பாக, எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, விரக்தியின் உச்சத்துக்கே சென்று பேசிக் கொண்டிருக்கிறார். மேட்டூர் அணை நீரை பாசனத்துக்காக குறிப்பிட்ட நாளில் இல்லை, அதற்கும் முன்பாகவே திறந்துள்ளோம்.
தொடர்ந்து நல்ல மழை பெய்வதை, நல்லாட்சிக்கான அடையாளமாக மக்கள் இன்று போற்றிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், இதை வைத்தும் சிலர் அரசியல் செய்கிறார்கள். என்ன அரசியல் “விளைவித்த நெல்லை வாங்கவில்லை, அது அழுகி விட்டது” என்று ஏதாவது அவதூறுகளை பழனிசாமி சொல்லிக் கொண்டு வருகிறார். விவசாயிகள் பாடுபட்டு, உற்பத்தி செய்யும் ஒரு நெல்மணி கூட வீணாகக் கூடாது என்று அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன். அந்த அடிப்படையில், கடந்த 4 ஆண்டுகளில், முந்தைய ஆட்சிக் காலத்தைவிட கூடுதலாக நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 4 ஆண்டுகளில், விவசாயிகளிடம் இருந்து ஒரு கோடியே 70 லட்சத்து 45 ஆயிரத்து 545 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதில் ஆண்டுக்கு சராசரியாக 42 லட்சத்து 61 ஆயிரத்து 386 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது நமது ஆட்சியின் புள்ளிவிவரம். முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில், சராசரியாக ஆண்டுக்கு 22 லட்சத்து 70 ஆயிரத்து 293 டன் நெல் மட்டுமே கொள்முதல் நடந்துள்ளது. இந்த அடிப்படை கூட தெரியாமல் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி பொய் சொல்லிக் கொண்டிருக்கிறார்.
அவரிடம் பொய்யையும், துரோகத்தையும் தவிர வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது. அவருடைய வரலாறே அதுதான். நெல் கொள்முதல் குறித்த மேலும் சில புள்ளிவிவரங்களை சொல்ல வேண்டும் என்றால், அதிமுக ஆட்சிக் காலத்தில், அக்டோபர் முதல் தேதி தான் நெல் கொள்முதல் தொடங்கப்பட்டது. நமது திராவிட மாடல் ஆட்சியில் செப்டம்பர் முதல் நாளே நெல் கொள்முதல் தொடங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டில் பருவமழைக்கு முன்பாக விவசாயிகள் நெல் அறுவடை செய்து, புதிய விலையில், நெல் விற்க செப்.1ம் தேதியே கொள்முதல் தொடங்கப்பட்டுவிட்டது.
கொள்முதல் செய்யப்பட்ட நெல் பாதுகாப்பாக மூடி வைக்கப்பட்டுள்ளது. நெல் கொள்முதல் ஈரப்பத அளவை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக அதிகரிக்க ஒன்றிய அரசுக்கு நான் கோரிக்கை வைத்தேன். அவர்களும் அந்த கோரிக்கையை பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். தன்னை விவசாயி என்று சொல்லிக் கொள்ளும் பழனிசாமி ஆட்சியின் போது தான், 3 வேளாண் சட்டங்களை ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்தது.
அதற்கு எதிராக, 2 ஆண்டு காலம் போராடிய விவசாயிகளை பழனிசாமி, ‘புரோக்கர்கள்’ என்று கொச்சைப்படுத்தினார். அதை நானும் மறக்கமாட்டேன். விவசாயிகளும் மறக்க மாட்டார்கள். நமது திராவிட மாடல் ஆட்சி அமைந்ததும் 3 வேளாண் சட்டங்களுக்கும் எதிராக, சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தவன், உங்கள் முன்னால் நிற்கும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். அதுவும் நாட்டிற்கு நன்றாக தெரியும். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
