மயிலாடுதுறை: நெல்லின் ஈரப்பதம் 22 சதவீதமாக உயர்த்தி தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் மேலையூர் கிராமத்தில் இயங்கி வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல் மற்றும் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளின் நகர்வு பணிகளை அமைச்சர்கள் சக்கரபாணி, மெய்யநாதன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். இவ்வாய்வின்போது, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நிர்வாக இயக்குனர் ஏ.அண்ணாதுரை, மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
இவ்வாய்வின்போது, உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்ததாவது: தமிழ்நாட்டில் நெல் கொள்முதல் செய்வது தொடர்பாக முதலமைச்சர் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர்களுடன் காணொலி வாயிலாக நடத்தப்பட்ட ஆய்வுக்கூட்டத்தின்போது, நெல் விளைகின்ற அனைத்து மாவட்டங்களிலும் நெல் கொள்முதல் நிலையங்களில் வாங்கப்படும் நெல்லினை பாதுகாக்க வேண்டும் எனவும், அதனை உடனடியாக நெல் அரவை ஆலைக்கு அனுப்ப வேண்டும் எனவும், வெளிமாவட்டங்களுக்கு அனுப்ப வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, 3 முறை முதலமைச்சர் டெல்டா மாவட்ட ஆட்சித்தலைவர்களுடன் ஆய்வுக்கூட்டத்தை நடத்தியுள்ளார்கள். அதனடிப்படையில், துறை சார்ந்த அலுவலர்களுடன் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு பணிகள் நடைபெற்று வருகின்றது.
தற்போது, இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் எடுக்கப்பட்ட நெல்லின் ஈரப்பதம் 14.8 சதவீதம் உள்ளது. கடந்த காலங்களில் அக்டோபர் மாதங்களில் நெல் கொள்முதல் நடைபெற்று வந்த நிலையில், முதலமைச்சர் பொறுப்பேற்றப்பின் 4 ஆண்டுகளாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் செப்டம்பர் மாதத்திலேயே விவசாயிகள் உற்பத்தி செய்கின்ற நெல்லினை வாங்க வேண்டும் என்ற அடிப்படையில் நெல் கொள்முதல் பணிகள் நடந்து வருகிறது. இவ்வாண்டு, சன்னரகத்திற்கு ஊக்கத்தொகையை 156 ஆக உயர்த்தியும், பொதுரகத்திற்கு 131 ஆக உயர்த்தி, சாதாரண நெல்லுக்கான ஒரு குவிண்டாலின் விலை ரூ.2545 மும், பொதுரகத்திற்கான ஒரு குவிண்டாலின் விலை ரூ.2500 என உயர்த்தி தந்துள்ளார்கள்.
டெல்டா மாவட்ட ஆட்சித்தலைவர்களின் கோரிக்கைக்கிணங்க, நெல்லின் ஈரப்பதம் 22 சதவீதமாக உயர்த்தி தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நாளது தேதியில் 700 அரிசி ஆலைகளில் 12 லட்சம் மெட்ரிக் டன் மாதந்தோறும் அரைக்கின்ற அளவிற்கு அரவைத் திறனை கொண்டுள்ளோம். இதனுடன் செறிவூட்டப்பட்ட அரிசியை கலந்து பொதுமக்களுக்கு வழங்கவுள்ளோம். முதலமைச்சர் பொறுப்பேற்றப்பின், ஒவ்வொரு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 800 மூட்டைக்கு பதிலாக 1000 மூட்டைகள் வாங்க வேண்டும் என அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒரு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஒரு இயந்திரத்திற்கு பதிலாக நெல் அதிகமாக வரும் நேரங்களில் 2 இயந்திரங்கள் வைத்து 3000 முட்டைகள் வரை வாங்கி வருகின்றோம். வரும் காலங்களில் ஒரே இடத்தில் 5000 மூட்டைகள் தானியங்கி முறையில் நெல் கொள்முதல் பணிகள் நடைபெறுவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.
இதுவரை தமிழகத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 9 லட்சத்து 80 ஆயிரம் மெட்ரிக் டன் அதிகமாக நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தை பொறுத்தவரை 91 சதவீதம் அறுவடை முடிந்துவிட்டது. மீதமுள்ள 9 சதவீதம் அறுவடை பணிகள் விரைவில் முடிவடைய உள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில், 144 எண்ணிக்கையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, 1 லட்சத்து 19 ஆயிரத்து 856 மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டு, 93 ஆயிரத்து 640 மெட்ரிக் டன் நெல் பாதுகாப்பாக நகர்வு செய்யப்பட்டு, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இருப்பில் உள்ள 26,396 மெட்ரிக் டன் நெல் பாதுகாப்பாக மூடி வைக்கப்பட்டு நகர்வு செய்யப்படும். லாரி மற்றும் இரயில்களின் மூலமாக நெல் நகர்வு செய்யப்பட்டு வருகிறது.
கூடுதலாக வேளாண்மைத்துறை சார்பில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கிடங்குகளில் 4396 மெட்ரிக் டன் நெல் மணிகள் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. இக்குறுவை பருவத்தில் கூடுதலாக கொள்முதல் செய்யப்பட்ட நெல் மணிகளை சேமிப்பதற்காக மல்லியம் பகுதியில் சுமார் 3500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட தனியார் கிடங்கும் மற்றும் NPKRR சர்க்கரை ஆலையில் உள்ள சுமார் 10,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கிடங்கில் தற்பொழுது நெல் சேமிக்கப்பட்டு வருகின்றன என தெரிவித்தார்.
தொடர்ந்து, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் பணிகள், கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளின் நகர்வு பணிகள் தொடர்பாக உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி தலைமையில் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் முன்னிலையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. பிற்படுத்தப்பட்டோர். இவ்வாய்வின்போது, கூடுதல் ஆட்சியர் கோகுல், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் நலினா, வேளாண்மை துறை இணை இயக்குநர் சேகர், மாவட்ட வழங்கல் அலுவலர் அர்ச்சனா, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் கமலக்கண்ணன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.